ரஞ்சன் அருண்பிரசாத்
இலங்கையில் 30 வருட யுத்தம் 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், நாடு பொருளாதார ரீதியிலும், பாதுகாப்பு ரீதியில் முன்னேற்றம் அடைந்து வந்த பின்னணியில், 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர், மீண்டும் பல்வேறு பாதிப்புக்களை நாடு எதிர்நோக்க ஆரம்பித்தது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னரான காலப் பகுதியில் இலங்கையின் பிரதான வருமானமான சுற்றுலாத்துறை முற்று முழுதாக பாதிக்கப்பட்டது.
இலங்கை பொருளாதாரத்தில் எந்தவித பாரிய பிரச்சினைகளும் இல்லாமல் இருந்த காலம் 2018 வரைதான்.
2018ம் ஆண்டு இலங்கைக்கு 23.34 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகைத் தந்த நிலையில், அந்த எண்ணிக்கை 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு 19.14 லட்சமாக குறைவடைந்தது.
அதன்பின்னர், உலகையே அச்சுறுத்தும் கோவிட் வைரஸ் தாக்கம் இலங்கையின் பொருளாதாரத்தை முற்று முழுதாகவே பாதிப்படைய செய்தது.
இலங்கைக்கு 2020ம் ஆண்டு 5.08 லட்சம் சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகை தந்துள்ளனர்.
இலங்கையின் பிரதான வருமான மார்க்கமாக விளங்கும் சுற்றுலாத்துறை மாத்திரமின்றி, ஏனைய அனைத்து துறைகளும் முற்று முழுதாகவே பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இலங்கையின் ஏற்றுமதி துறையும் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதையடுத்து, நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதை, அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது.
இவ்வாறான நிலையில், கடந்த சில மாத காலமாக கோவிட் பரவல் காரணமாக நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டிருந்தது.
இந்த பயணக் கட்டுப்பாடு கடந்த 31ம் தேதி அதிகாலையுடன் தளர்த்தப்பட்ட பின்னணியில், அன்று முதலே குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தை நோக்கி இளைஞர், யுவதிகள் அதிகளவில் படையெடுக்க ஆரம்பித்தனர்.
நூற்றுக் கணக்கான இளைஞர்கள் என்பதை விட, ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் நாட்டிலுள்ள அனைத்து குடிவரவு, குடியகல்வு திணைக்கள அலுவலக வாசல்களிலும் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.
இவர்கள் வேறு நாடுகளை நோக்கி பயணிக்கும் நோக்குடன், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற்றுக்கொள்வதற்காகவே குடிவரவு, குடியகல்வு திணைக்கள வாசல்களில் திரண்டுள்ளனர்.
”நாட்டிலுள்ள பெரும்பாலானோர் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்காகவே வெளிநாடுகளை நோக்கி பயணிக்கின்றனர். வெளிநாட்டவர்கள் களியாட்டங்களுக்காகவும், மகிழ்ச்சியாக இருப்பதற்காகவும் இலங்கைக்கு வருகைத் தருகின்றனர். இலங்கையில் பொருளாதார முன்னேற்றம் இருக்கமானால், இங்கு இருந்துக்கொண்டே பொருளாதாரத்திலும் வலுப் பெற்று, மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும். ஆனால் தற்போது பொருளாதார ரீதியில் முன்னேற முடியவில்லை. அதனாலேயே வெளிநாட்டிற்கு செல்ல முயற்சிக்கின்றோம்” என குடிவரவு குடியகல்வு திணைக்கள வாசலில் காத்திருந்த இளைஞர் ஒருவர் தெரிவிக்கிறார்.
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் படகுகளில், சட்டவிரோதமாக இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இலங்கையர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.
எனினும், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வது பாரிய அளவில் குறைவடைந்திருந்தது.
எனினும், இந்த கொரோனா தாக்கத்தின் பின்னரான தற்போதைய சூழ்நிலையில், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பலரும் வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருவதை அவதானிக்க முடிகின்றது.
கடந்த கால தரவுகளுடனான ஒரு பார்வை
2019ம் ஆண்டு 203,186 பேர் வேலைவாய்ப்பு பெறும் நோக்குடன் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தை மேற்கோள்காட்டி, இலங்கை மத்திய வங்கி 2019ம் ஆண்டு ஆண்டறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா தாக்கம் பரவுவதற்கு முன்னதான 2018ம் ஆண்டு இலங்கையிலிருந்து வேலைவாய்ப்பு நிமித்தம் 211,459 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
2017ம் ஆண்டு 211,992 பேர் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக மத்திய வங்கி தெரிவிக்கிறது.
இவ்வாறு வேலைவாய்ப்புக்களுக்கு செல்வோரில் அதிகம் பேர் சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளுக்கே அதிகளவில் பயணிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிடுகின்றது.
கடந்த ஆண்டுகளில் பதிவாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், முறையே சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளுக்கே அதிகளவிலானோர் பயணித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறான பின்னணியில், கோவிட் அதிகளவில் தாக்கத்தை செலுத்திய 2020ம் ஆண்டு காலப் பகுதியில் மாத்திரம், வேலை வாய்ப்புக்களுக்காக 53,713 பேர் மாத்திரமே வெளிநாடுகளை நோக்கி பயணித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி, இலங்கை மத்திய வங்கி 2020ம் ஆண்டறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு வெளிநாடு பயணித்தவர்களில் 32,453 ஆண்களும், 21,260 பெண்களும் அடங்குகின்றனர்.
கோவிட் தோற்றினால், புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிப்பு
கோவிட் தொற்று காரணமாக இலங்கையிலிருந்து பணியாளர்களை பெற்றுக்கொள்ளும் நாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.
2020ம் ஆண்டு முதலாவது கோவிட் அலையினால், இத்தாலி, தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிகளவிலான இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பியிருந்ததையும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில தசாப்தங்களில் 2020ம் ஆண்டு காலப் பகுதியிலேயே குறைவளவான இலங்கையர்கள், வேலை வாய்ப்புக்களை எதிர்பார்த்து, வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமையை, மத்திய வங்கியின் கடந்த கால ஆண்டறிக்கையில் ஊடாக காண முடிகின்றது.
இவ்வாறான பின்னணியில், 2021ம் ஆண்டும் கொரோனாவினால் இலங்கை பாரிய தாக்கங்களை சந்தித்துள்ளது.
இதனால், இலங்கையிலுள்ள நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக, வெளிநாடுகளை நோக்கி பயணிக்க தயாராகி வருகின்றனர்.
இதனால், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற்றுக்கொள்வதற்காகவே, குடிவரவு, குடியகல்வு திணைக்கள அலுவலகங்களில் இளைஞர், யுவதிகள் வரிசையில் நின்றுக்கொண்டிருப்பதை காண முடிகின்றது.
பொருளாதார நிபுணரின் பார்வை
பொருளாதார ரீதியில் நாடு எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்பதில் இளைஞர், யுவதிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகமே, அவர்களை ஜனநாயக நாடுகளை நோக்கி பயணிக்கும் எண்ணத்தை ஏற்படுத்துவதற்கான காரணம் என கொழும்பு பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.
கணசே மூர்த்தி
இலங்கையில் இதற்கு முன்னர் 1970ம் ஆண்டு காலப் பகுதியிலேயே இளைஞர், யுவதிகள் இவ்வாறு வெளிநாடுகளை நோக்கி பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், அன்று வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் குறைவாக காணப்பட்டதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.
அந்த காலப் பகுதியில் இளைஞர், யுவதிகளுக்கு வெளிநாடு செல்ல முடியாத காரணத்தினாலேயே, இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தி போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் கூறுகிறார்.
எனினும், இன்று வெளிநாடுகளுக்கு செல்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றமையினால், தமது எதிர்காலம் குறித்து சிந்தித்து இளைஞர், யுவதிகள் வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த இளைஞர், யுவதிகளின் எதிர்காலம், இலங்கையில் நம்பிக்கை அளிப்பதாக இல்லை என அவர் கூறுகின்றார்.
இலங்கையின் எதிர்காலம் தொடர்பிலான நம்பிக்கையை இழந்துள்ள இளைஞர்கள், யுவதிகள் இன்று வெளிநாடுகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
இலங்கையில் முன்னரான காலப் பகுதியில் சிறுபான்மை இளைஞர்களே அதிகளவில் வெளிநாடுகளை நோக்கி செல்ல ஆர்வம் காட்டியதாக கூறிய அவர், இன்று நாட்டின் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களே வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருவதாகவும் குறிப்பிடுகின்றார்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் பதிலை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அரச தரப்பிலிருந்து பதிலளிக்க எவரும் முன்வரவில்லை.