பினாங்கு துணை முதல்வர் பி இராமசாமி, கெடா மாநில அரசு சூதாட்ட வளாகங்களைத் தடை செய்து, மாநிலத்தில் மது விற்பனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையால் கோபமடைந்தார்.
முஸ்லிமல்லாதவர்களைக் கட்டுப்படுத்தி, அவர்களின் உரிமைகளை மறுப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கை இது என்று இராமசாமி விவரித்தார்.
“மலேசியா ஒரு மதச்சார்பற்ற அரசியலமைப்பைக் கொண்ட மதச்சார்பற்ற நாடு, இங்கு முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று எவரும் கூறுகிறார்கள்.
“ஆனால் இங்கு, பல ஆண்டுகளாக நுட்பமான மற்றும் அப்பட்டமான இஸ்லாமியமயமாக்கல் உள்ளது. இது போன்ற விஷயங்கள் முஸ்லீம் அல்லாதவர்களுக்குப் பல்வேறு விஷயங்களில் முடிவெடுக்கும் உரிமையை மறுப்பதாகும் – முஸ்லிம் அல்லாதவர்களின் தேர்வுகளில் கட்டுப்பாடுகளுக்கு மேல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன,” என்று அந்த டிஏபி தலைவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
எந்த ஒரு சூதாட்ட வளாகத்திற்கும், இனி சூதாட்ட உரிமங்களை அனுமதிக்க வேண்டாம் என்றும், மாநிலத்தில் மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு (பிபிதி) கெடா மாநில அரசாங்கம் அறிவுறுத்தியது குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
“இது மது அருந்துவது அல்லது சூதாட்டக் கடைகளில் சூதாடுவது பற்றியது அல்ல. முஸ்லீம் அல்லாத அனைவரும் மது அருந்துவதில்லை, அனைவரும் 4டி எண் கடைகளுக்குச் செல்வதில்லை.
“நல்லது கெட்டது எது என்பதை முஸ்லிமல்லாதவர்களே தீர்மானிக்கட்டும்.
“மது அருந்துவதற்கு அல்லது மது அருந்தாமல் இருப்பதற்கான அவர்களின் உரிமையை மறுப்பதில் அல்லது அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவது பற்றி முடிவெடுக்கும் உரிமையில் எந்தத் தார்மீக காவல் தேவையும் இல்லை,” என்று அவர் கூறினார்.
‘முஸ்லிமல்லாதவர்கள் தார்மீகக் கொள்கைகளுக்குக் கட்டுப்படாதவர்கள் அல்ல’
மலேசியாவில் உள்ள முஸ்லீம் அல்லாதவர்கள் தங்கள் மதப் பழக்கவழக்கங்களில் சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள் என்றும், அவர்களின் முஸ்லீம் சகாக்களைப் போல தார்மீக நன்னெறி கொள்கைகளுக்குக் கட்டுப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
“பல எதிர்ப்புகளை மீறி, கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) மது விற்பனைக்கு விதித்த முந்தைய தடையுடன், இந்தத் தைரியமான மற்றும் உணர்ச்சிபூர்வ நடவடிக்கை தொடங்கியது.
“முஸ்லிம் அல்லாத பல்பொருள் விற்பனை கடைக்கு எதிராக, டிபிகேஎல் முன்னெடுத்த நடவடிக்கையால் உந்தப்பட்டு, கெடா மாநில அரசு இப்போது மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி அதிகாரிகளுக்கும் 4D நான்கு எண் கடைகளைத் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.
“இந்த முடிவு முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகளை இஸ்லாமியமயமாக்கவில்லை என்றால், பிறகு என்ன?” என்பதுதான் கேள்வி.
“மாநில அரசு முஸ்லிம்கள் சூதாட்டக் கடைகளுக்குச் செல்வதைத் தடை செய்ய விரும்பினால், நான் ஒன்றும் சொல்ல முடியாது, ஆனால் முஸ்லிம் அல்லாதவர்களுக்குச் சூதாட்டக் கடைகளுக்குச் செல்வதற்கான உரிமையை மறுக்க மாநில அரசாங்கத்திற்கோ உள்ளூராட்சி அதிகாரிகளுக்கோ உரிமை இல்லை.
“முஸ்லிம் அல்லாதவர்களிடம் ஏன் இந்த மதவெறியைத் திணிக்க வேண்டும்? அவர்கள் வரி செலுத்தும் குடிமக்கள் இல்லையா?
“இதுபோல் தண்டிக்கப்படும் அளவிற்கு, அவர்கள் (கெடா முதல்வர்) முஹம்மது சனுசிக்கு எதிராக என்ன குற்றம் செய்தார்கள்?
“மது அருந்தலாமா அல்லது 4டி எண்களை வாங்கலாமா என்பதை அவர்களே தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லையா.
“முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகளை மறுக்க சனுசி யார்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இனி கெடாவில் என்ன நடக்கும்? மதுப் புட்டிகளும், அதிர்ஷ்ட எண்களும் சட்ட விரோதமாக இயங்கிக் கொண்டிருக்கும். அம்மாநிலத்தில் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கெல்லாம் இனி கொண்டாட்டம்தான். இந்தச் சட்ட விரோத நடவடிக்கைகள் இவர்களின் பராமரிப்பிலேயே நடைபெறும். அதற்கு கள்ளச் சந்தைக்காரர்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு மாதாந்திரக் கப்பம் செலுத்தினால், கள்ளச் சந்தைகளை அவர்கள் பாதுகாப்பார்கள். வெறும் கண் துடைப்புக்கு அவ்வப்போது, அமலாக்க அதிரடி நடவடிக்கைகளை அரங்கேற்றுவது போல் சில தொடர் நாடகங்கள் இடம் பெறும். இவர்களுக்கு மாமுல் செலுத்த வேண்டியுள்ளதால் ஒரு வேளை அந்தச் சரக்குகளுக்கு/சேவைகளுக்குப் பயனீட்டாளர்கள் கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.