இலங்கைச் சிறையில் இருந்து 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்த 23 தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் 11ஆம் தேதி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையிலிருந்து பீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 விசைப்படகுகளையும் அதில் இருந்த அகத்தியன்,சிவசக்தி,சிவராஜ் உள்ளிட்ட 23 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் வழக்கு பதிவு செய்த யாழ்பாணம் மீன் வளத்துறையினர் இலங்கை பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.

இலங்கை போரில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நிதியுதவி – வெடிக்கும் எதிர்வினை

‘கடன் பொறியில் சிக்கிய’ இலங்கைக்கு ‘நச்சு’ உரத்தை அனுப்பிய சீனா – பின்னணி என்ன?

இந்நிலையில் இலங்கை பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட நாகை மீனவர்களை நேரடியாக சந்தித்து மீனவர்களின் நலம் குறித்து கேட்டறிந்து பின்னர் இலங்கை சட்டத்துறைக்கும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறையிடமும். மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்ததார்.

இந்நிலையில் மீனவர்களின் வழக்கு இன்று பருத்திதுறை நீதிமன்றத்தில் நீதிபதி கிஷாந்தன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கிஷாந்தன் மீனவர்களுக்கு வரும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்து அதனை ஓராண்டுக்கு ஒத்தி வைத்து நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும் மீனவர்கள் பயன்படுத்திய பல லட்ச ரூபாய் மதிப்பிலான இரண்டு விசைப்படகுகளும் அதில் இருந்த மீன்பிடி உபகரணங்களையும் இலங்கை அரசுடமையாக்கப்படும் என தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் கொழும்பில் உள்ள மெரிஹானா முகாமில் தங்க வைக்கப்பட்டு ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக மீனவர்கள் 23 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BBC