இலங்கையில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 6 பேர் உயிரிழப்பு

இலங்கையில் படகு கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீட்பு பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர்

கொழும்பு: இலங்கையின் கிழக்கு மாகாணமான திரிகோணமலையில் உள்ள குறிஞ்சங்கேணி என்ற கிராமத்தில் இருந்து, கின்னியா நகருக்கு நேற்று காலை படகு ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த படகில் பள்ளி மாணவர்கள் உள்பட 20-க்கும் அதிகமானோர் பயணித்தனர்.

இந்த நிலையில் இந்த படகு கின்னியா நகரை நெருங்கி கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் நீரில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் இலங்கை கடற்படையினர் மீட்பு படகுகளில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் இந்த கோர விபத்தில் பள்ளி மாணவர்கள் 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

maalaimalar