இலங்கை கடலில் 250 கிலோ போதைப் பொருள் பிடிபட்டது – கடற்படை நடவடிக்கை

இலங்கை கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பில், பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் தெற்கு கடல் பிராந்தியத்தில் 900 கடல் மைல் தொலைவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 250 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து, போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருடன் இணைந்து இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாட்டு மீன்பிடி படகொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே, இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

6 பேர் கைது

சம்பவம் தொடர்பில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினால் அண்மை காலங்களில் இவ்வாறான பல்வேறு சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் 290 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 04ம் தேதி நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் 336 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், செப்டம்பர் மாதம் 10ம் தேதி நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் 170 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதி வரை, இலங்கை கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் 13.16 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சட்டவிரோதமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.