இலங்கைக்கு கொக்கைன் போதைப் பொருள் கடத்த முயன்ற வழக்கில் முக்கியக் குற்றவாளியான காடல்குடி காவல் நிலையத்தில் காவலராகப் பணி புரியும் பாலமுருகன் உட்பட 8 பேரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஒரு கோடி மதிப்பிலான கொக்கைனை இலங்கைக்கு கடத்த முயன்ற போலீஸ் உட்பட 8 பேர் கைது
ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கொக்கைன் போதைப் பொருள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் தீவிர குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து வியாழக்கிழமை காலை ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து சோதனை செய்து வந்தனர்.
அப்போது ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தனியார் நட்சத்திர விடுதிக்குப் பின்புறம் ஒரு கும்பலை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து பவுடர் பாக்கெட் ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்த பவுடரை சோதனை செய்ய ராமநாதபுரத்தில் உள்ள போதை தடுப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அந்த சோதனையில் அது கொக்கைன் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அவற்றைக் கைப்பற்றிய தீவிர குற்றப் பிரிவு அதிகாரிகள், பிடிபட்ட சிவகங்கை மாவட்டம் சூரியகுமார், பாம்பனைச் சேர்ந்த மனோஜ், சாதிக் அலி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், அங்குரதராம் ஆகிய 5 பேர் மீது ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் இலங்கைக்கு கொக்கைன் கடத்த மூளையாகச் செயல்பட்டு வந்தது ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த காவலர் பாலமுருகன் எனத் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, காவலர் பாலமுருகன் உட்பட 8 பேரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
BBC