கடும் நிபந்தனைகளுடன் இலங்கைக்கு கைகொடுக்கும் இந்தியா

இலங்கையில் தற்போது எழுந்துள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கடனுதவியை வழங்க முன்வந்துள்ள இந்தியா, பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்தியாவின் எக்ஸிம் வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க முன் வந்துள்ளது.

இதற்கமைய இந்த கடன் தொகையை மீள செலுத்துவதற்கு 12 மாதங்களை விட நீடிக்க முடியாது என குறித்த வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன் 500 மில்லியன் டொலரில் 75 வீதத்தை இந்தியாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த வேண்டும் என எக்ஸிம் வங்கி தெரிவித்துள்ளது.

25 வீதத்தை மூன்றாவது தரப்பிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வழங்கப்படவுள்ள இந்த கடன் வசதியின் கீழ் கொள்வனவு செய்யப்படும் முதலாவது எண்ணெய் தொகை இந்த மாதம் 15 ஆம் திகதி கிடைக்கவுள்ளது.

இந்தியா ஏற்கனவே அத்தியாவசிய பொருள் கொள்வனவிற்காக வழங்கிய 500 மில்லியன் டொலர் கடன் , 400 மில்லியன் டொலருக்கான வட்டியை மீளச் செலுத்துவதற்கு இலங்கை கால அவகாசம் கோரியுள்ள பின்புலத்திலேயே இந்தியா இந்த கடன் தொகையை வழங்குகின்றது.

மருந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

 

 

IBC Tamil