மக்களின் ஆணையை மீறிவிட்டீர்கள் – பதவியை தூக்கி எறிந்த எம்.பி

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவியை தொடர்வது மனசாட்சிக்கு பொருந்தாத காரணத்தினால் அதிலிருந்து விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிச் செயலாளர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

69 இலட்சம் மக்களின் ஆணையை தற்போதைய அரசாங்கம் மீறியுள்ளதாக கொழும்பை அண்மித்த, தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

”அரசாங்கத்தை உருவாக்குவதில் முன்னோடியாக செயற்பட்ட இரண்டு தலைவர்களை அமைச்சரவையில் இருந்து அவசர அவசரமாக நீக்கி 69 இலட்சம் மக்களின் ஆணையை மீறியமை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, இதனால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் கொந்தளிப்பு அரசாங்கத்தை நோக்கி செலுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் ஏனைய பிரிவினரால் பலத்த எதிர்ப்பின் காரணமாக இனியும் அந்தப் பதவியை வகிக்க முடியாது.

69 இலட்சம் ஆணை மற்றும் 2/3 நாடாளுமன்ற ஆணையை உருவாக்குவதற்கு ஆரம்பம் முதலே பல்வேறு தியாகங்களைச் செய்த பல்வேறு அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் புறக்கணித்து, அக்கட்சிகள் கூட்டு முயற்சியின்றி முடிவெடுத்து அரசியல் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டன.

நாட்டுக்கும் அரச தலைவருக்கும் விரோதமான பலர் அரசாங்கத்திலும் அமைச்சரவையிலும் இருக்கும் சூழலில் உண்மையான நண்பர்களை நாடும் மக்களும் எப்படி சகித்துக் கொள்வார்கள்.

கட்சியை விட நாட்டை முன்னிறுத்தி அரசியல் செய்வதால் ஏற்பட்ட அநீதிகளை நாம் சகித்துக்கொண்டோம்” எனக் கூறியுள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தையும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக நிமல் பியதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

IBC Tamil