இலங்கையில் நிலவும் பொருளியல் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டால் மரணங்கள் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தேவையான மருந்துப் பொருள்கள் இல்லாததால் நோயாளிகளின் அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்கும் நிலைக்கு மருத்துவமனைகள் தள்ளப்பட்டுள்ளன.
இலங்கை 80 விழுக்காட்டிற்கும் அதிகமான மருந்துப் பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. எனினும், பொருளியல் நெருக்கடி காரணமாக அந்நிய நாணய கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசிய மருந்துப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் சுகாதாரப் பராமரிப்பு முறை செயலற்றுப் போகும் நிலையில் இருக்கிறது.
மருந்துத் தட்டுப்பாடு காரணமாக தலைநகர் கொழும்பிற்கு அருகே உள்ள அபெக்ஷா புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைகளும் அறுவை சிகிச்சைகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகளும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
“புற்றுநோயாளிகளுக்கு இது மிகவும் சோதனையான கட்டம். அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள காலையில் நாங்கள் திட்டமிடுவோம். ஆனால், மருந்துப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் திட்டமிட்டபடி அறுவை சிகிச்சைகளை நடத்த முடியாமல் போகிறது,” என்றார் டாக்டர் ரோஷன் அமரதுங்க.
நிலவரம் விரைவில் மேம்படாவிட்டால், நோயாளிகள் பலர் இறந்துவிடக்கூடும் என அவர் எச்சரித்தார். மருந்துகளைத் தருவிக்கும் பணியில் ஈடுபட்டுவரும் அதிகாரி ஒருவர், ஏறக்குறைய 180 மருந்துப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவித்தார். ரத்த சுத்திகரிப்பு நோயாளிகளுக்கான ஊசிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கான மருந்துகள், குறிப்பிட்ட சில புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் தனிப்பட்ட நன்கொடையாளர்களும் மருந்துகளை வழங்க முன்வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் திரு சமண் ரத்நாயக்க எனும் அந்த அதிகாரி கூறினார். ஆனால், அவை வந்துசேர்வதற்கு நான்கு மாதங்கள் வரை ஆகலாம் என்றார் அவர். மருந்துகளை வரவழைக்க உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் தனியார் நன்கொடையாளர்களிடம் இலங்கை உதவி கோரி உள்ளது.
இதற்கிடையே, இந்தியா 25 டன் மருந்துப் பொருள்களுடன் இதர மருத்துவ உபகரணங்களையும் இலங்கைக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“இந்தியா வேறெந்த நாட்டிற்கு இந்த அளவுக்கு உதவியதில்லை. இதற்காக நாங்கள் நன்றியை வெளிப்படுத்துகிறோம்,” என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பெய்ரிஸ் கூறினார்.
Tamilmurasu