சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா

தமிழக முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, இதுவரை தனது உடன்பிறவா சகோதரி என அழைத்து வந்த சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்.

சசிகலாவின் கணவர் எம். நடராஜன், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன் உள்ளிட்ட மேலும் 13 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நீக்கப்படுவதாகவும், கட்சித் தொண்டர்கள் எவரும் அவர்களுடன் தொடர்புவைத்துக் கொள்ளவேண்டாமென்றும் ஜெயலலிதா பெயரில் வெளியாகியிருக்கும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆனால் ஏனிந்த நடவடிக்கை என்பது பற்றி அவ்வறிக்கையில் விளக்கமில்லை. வழக்கமாக நீக்கப்படும்போது கட்சி விரோத நடவடிக்கையில் ஒருவர் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படும். ஆனால் அது கூட இப்போது இல்லை.

சசிகலாவின் உறவினர் சுதாகரனை தனது வளர்ப்பு மகனாக ஜெயலலிதா 90களில் அறிவித்து அவரது திருமணத்தையும் விமரிசையாக நடத்தியபோதுதான், சசிகலாவை தனது ‘உடன்பிறவா சகோதரி’ என்று வர்ணித்தார்.

தமிழக அரசின் முன்னாள் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றியவரான எம்.நடராஜனை ஜெயலலிதாவின் அரசியல் உதவியாளராக்கியது எம்.ஜி.ஆர்தான் என்று கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட பூசல்களில் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை தீர்மானித்தவர்கூட அவர்தான் எனினும், ஜெயலலிதா முதல்வரான பிறகு நடராஜன் கட்சியில் வெளிப்படையாகச் செயல்படவில்லை.

ஆனால் நடராஜனின் மனைவி சசிகலா போயஸ் தோட்ட இல்லத்தில் குடிபுகுந்து ஜெயலலிதாவின் உற்ற தோழியானார். பதவியிழந்த பிறகு 1996-ல் தனக்கும் சசிகலாவிற்கும் எவ்வித உறவுமில்லை என்று அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால் சில மாதங்களிலேயே சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்திற்கு வந்துவிட்டார்.

இன்றைய அறிவிப்பிற்குப் பிறகும் சசிகலா அங்கே தொடர்கிறாரா என்பது தெரியவில்லை. எப்படியும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அபரிமிதமான் செல்வாக்குடன் திகழும் சசிகலாவின் உறவினர்கள் அனைவரும் ஒரு சேர கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், சசிகலாவின் இன்னொரு உறவினர் இளவரசி உள்ளிட்டோர் முக்கிய குற்றவாளிகள் என்பதும், வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கும்போது சசிகலா உள்ளிட்டோர் விலக்கப்பட்டிருக்கின்றனர் என்ப்தும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் டிசம்பர் 30ஆம் நாளன்று அ இஅதிமுகவின் பொதுக்குழு சென்னை அருகே வானகரத்தில் கூடவிருக்கிறது. அப்போது கட்சியின் புதிய அதிகாரக் கட்டமைப்பு தெரியவரக்கூடும் என நம்பப்படுகிறது.

-BBC