இலங்கையின் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலுக்கு எதிரான பிரசாரங்கள் நீண்டகாலமாக கட்சிக்குள் வலுத்து வந்த நிலையிலேயே தலைவர், துணைத் தலைவர் மற்றும் தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நேற்று திங்கட்கிழமை தேர்தல் நடத்தப்பட்டது.
ரணிலை எதிர்த்துப் போட்டியிட்ட கரு ஜயசூரியவும் தேசிய அமைப்பாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாசிறி ஜயசேகரவும் தோல்வி கண்டுவிட்டார்கள் என்று திங்கட்கிழமை மாலை தொலைபேசிகளுக்கு குறுஞ் செய்திகள் வரத்தொடங்கியதுதான் தாமதம், அதுவரை கட்சித் தலைமையகமான ஸ்ரீகோத்தவுக்கு முன்பாக ரணில் எதிர்ப்பு கோஷங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் வன்முறைகளில் ஈடுபடத் தொடங்கினர்.
அதன்பின்னர் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதும் ரணில் அணியினரை எதிர்த்துப் போட்டியிட்ட கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரின் வேண்டுகோளின் பின்னரே அங்கிருந்து கூட்டத்தை கலைக்க முடிந்தது.
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இதுவரை காலமும் நிலவிவந்த தலைமைத்துவப் பிரச்னை நேற்று அதன் உச்சத்தை தொட்டிருந்தது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் அதிக காலம் கட்சியின் தலைவராக இருந்துவந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு கடந்த சில ஆண்டுகளாக ஆளுங்கட்சியை எதிர்கொள்வதை விட கட்சிக்குள்ளேயே இருந்துவந்த எதிர்ப்புகளை சமாளிக்கவே போதும்போதும் என்றாகிவிட்டது.