அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து முற்றாக வெளியேறின

ஈராக் முன்னாள் தலைவர் சதாம் ஹூசேனை ஆட்சியில் இருந்து அகற்றக் காரணமாக இருந்த ஈராக்கிய ஆக்கிரமிப்பு நடைபெற்று சுமார் 9 ஆண்டுகள் முடிவடையப் போகும் நிலையில் ஈராக்கில் நிறுத்தப்பட்டிருந்த கடைசி தொகுதி அமெரிக்க இராணுவத் துருப்புக்கள் எல்லையைக் கடந்து குவைத்துக்கு சென்றனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட படையினரை ஏற்றிக்கொண்டு நூறு வாகனங்கள் எல்லையை கடந்தன. ஈராக்கில் கடந்த காலத்தில் ஐநூறு இராணுவப் படைத்தளங்களில் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டிருந்தன.

அதேநேரம் பெரும்பான்மையான ஈராக்கியர்கள், அமெரிக்கப் படையினர் திரும்பச் செல்வது குறித்து மகிழ்ச்சி அடைந்தாலும் தமது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து அவர்கள் கவலைப்படுவதாக அங்கிருக்கும் நிருபர்கள் கூறுகின்றனர்.

இந்த இராணுவ நடவடிக்கை மூலமாக அமெரிக்காவுக்கு பெரும் பொருட்செலவும் உயர்செலவும் ஏற்பட்டும் அதற்கேற்ற அரசியல் இலாபம் கிடைக்கவில்லை என்று விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.