இலங்கையில் விரைவான பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்காக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
எனவே இலங்கையின் அரசியல் தளம் மீது, சர்வதேசத்துக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் இன்னும் முயற்சிகளை அவர் மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மத்தியில் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்புகளை அவர் கையாளும் விதத்திலும் சர்வதேச நம்பிக்கை தங்கியிருக்கிறது என்பதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
சர்வகட்சி அரசாங்கம்
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்தின் ஒரு தொகுதியாக மாற தயக்கம் காட்டுவதே, சர்வகட்சி அரசாங்கம் அமையாமைக்கான முக்கிய காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது இது தெளிவாகியுள்ளது.
பொதுத்தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால், அதில் வெற்றிபெற முடியும் என்ற உறுதியான நம்பிக்கை, சஜித் தரப்புக்கு உள்ளது.
கட்சிக்குள் இருக்கும் சில பிரமுகர்கள் அரசாங்கத்தில் சேரலாம் என்ற அச்சம் கூட, இந்த நம்பிக்கையை தடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணிலின் உறுதி
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினருக்கு, குறிப்பாக முதல் முறையாக நாடாளுமன்றம் வந்தவர்ளுக்கு முன்கூட்டியே வாக்கெடுப்புக்கு செல்லப்போவதில்லை என்று உறுதியளித்துள்ளார்.
இதன் மூலம் அவர்கள் ஓய்வூதியம் பெறுவதில் பிரச்சினை இருக்காது. இந்த விடயம் ரணிலுக்கும் ஆட்சியை கொண்டு செல்வதில் சாதகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அத்துடன் நீண்டகாலமாக அடிப்படையில் அவரது ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்தும் அவரின் நோக்கத்துக்கும் இது உதவும் என்று நம்பப்படுகிறது.
எரிபொருள் வரிசைகள் குறைந்து, சமையல் எரிவாயு இருப்புக்கள் தேவைப்படுபவர்களுக்குக் கிடைக்கப்பெற்றதால், ஜனாதிபதி விக்ரமசிங்க கணிசமான பொது அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
எனினும், அதன் தொடர்ச்சியை உறுதி செய்வதே அவர் முன் உள்ள சவால். அவர் எப்படி வளங்களை கண்டுபிடிப்பார்? என்பதும் அவருக்கு உள்ள சவால்களாகும் என்று அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
-tw