ஆதரவு வீழ்ச்சியால் இலங்கை அதிருப்தி – அமெரிக்கா தலைமையில் மேலும் சிலநாடுகள் இணைவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  இலங்கை  தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணையாளர்களாக மேலும் பல நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான வரைவுத் தீர்மானத்திற்கு ஆரம்பத்தில் பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளே அனுசரணை வழங்கியிருந்தன.

மேலும் சிலநாடுகள் இணைவு

இந்த நிலையில் அல்பேனியா, அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லத்வியா, லிச்சென்ஸ்டீன், லித்துவேனியா, லக்சம்பர்க், மார்ஷல் தீவுகள், நெதர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன.

நோர்வே, ஸ்லோவாக்கியா, சுவீடன், துருக்கி, பிரித்தானியா, வடக்கு அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் இந்தத் தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பான தீர்மானம்

இந்த நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வானது எதிர்வரும் 7 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான தீர்மானம் மீது எதிர்வரும் வியாழக்கிழமை (6) வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அந்த வகையில் ஜெனிவா கூட்டத் தொடரின் இறுதி அமர்வில் பங்கேற்பதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜெனிவா பயணமாகியுள்ளார்.

அலி சப்ரியுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் ஜெனிவா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

-ibc