புனர்வாழ்வு மைய யோசனையை இலங்கை அரசாங்கம் திரும்பப்பெறவேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இராணுவத்தால் நடத்தப்படும் புனர்வாழ்வு மையங்களில் மக்களைத் தடுத்து வைப்பதற்கு அதிகாரிகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கும் அண்மைய சட்ட வரைவை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு நடைமுறைப்படுத்தப்பட்டால், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், துஷ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிடும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று (18.10.2022) தெரிவித்துள்ளது.

2022, செப்டம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வு பணியகம் சட்டமூலம், போதைப்பொருள் சார்ந்த நபர்கள், முன்னாள் போராளிகள், வன்முறை தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பிற நபர்களின் மையங்களில் கட்டாய காவலில் வைக்க அனுமதிக்கிறது.

புனர்வாழ்வுப் பணியக யோசனை

புனர்வாழ்வுப் பணியக யோசனையின் மூலம், குறித்த புனர்வாழ்வு மையங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

மனித உரிமை சட்டத்தரணிகள், ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் சவால் செய்துள்ள இந்த வரைவு, புனர்வாழ்வுக்காக அனுப்பப்படுவதற்கான அடிப்படை எதனையும் விபரிக்கவில்லை.

எனினும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாதவர்களை கூட வலுக்கட்டாயமாக புனர்வாழ்வு செய்யும் வகையில், தெளிவற்ற மற்றும் தன்னிச்சையான அதிகாரங்களை வழங்குவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட இந்த புனர்வாழ்வு முயற்சிகள், குற்றஞ்சாட்டப்படாமல், பொதுமக்களை துஷ்பிரயோகம் செய்யும் ஒரு புதிய வடிவத்தை தவிர வேறொன்றுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வு  மையங்களில் தடுத்து வைக்கப்பட்ட மக்கள்

முன்னர் இலங்கை அரசாங்கம், தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளை செயற்படுத்துவதற்கு கட்டாய புனர்வாழ்வு மையங்களைப் பயன்படுத்தியது.

கடந்த 2009ஆம் ஆண்டில் முடிவடைந்த உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து, தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என அரசாங்கம் அடையாளப்படுத்திய ஆயிரக்கணக்கான மக்கள் இராணுவத்தால் நடத்தப்படும் புனர்வாழ்வு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அங்கு சிலர் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் வேறு துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும்,பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் தற்போதைய சட்டமூலம் யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களின் பின்னர் ‘முன்னாள் போராளிகளுக்கு’ மீண்டும் ‘புனர்வாழ்வு’ அளிக்க முயல்கிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டம்

சட்டமூலம் என்பது இலங்கையில் தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளை அங்கீகரிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம், போன்ற நீண்ட வரலாற்றின் மற்றும் ஒரு நடவடிக்கையாகும்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘தீவிரவாதிகள்’ என்று முத்திரை குத்தியுள்ள போராட்டக்காரர்களை குறிவைக்க இந்த சட்டம் பயன்படுத்தப்படலாம் என்று மீனாட்சி கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு கட்டாய புனர்வாழ்வு அமைப்பு உள்ளது, இது முன்னர் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளிக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு தளங்களில் இலங்கையின் ஆயுதப்படைகளால் நடத்தப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் ஒரு கைதியின் மரணம் தொடர்பில் நான்கு இராணுவ மற்றும் விமானப்படையினர் கைது செய்யப்பட்டதை மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டில், தன்னிச்சையான தடுப்புக்காவல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவானது, போதைப்பொருள் சிகிச்சையில் இலங்கை இராணுவத்தின் ஈடுபாடு மற்றும் மருத்துவ கவனிப்பு இல்லாமை மற்றும் நீதித்துறை செயல்பாட்டில் உள்ள முறைகேடுகள் குறித்து கவலை தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் வலுக்கட்டாயமாக ‘புனர்வாழ்விற்காக’ போதைப்பொருள் பாவனையாளர்களை தடுத்து வைப்பது மருத்துவ ரீதியாக பொருத்தமான போதைப்பொருள் சார்பு சிகிச்சையுடன் பொருந்தாது மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று மனித உரிமைகள் கண்காணிப்பக தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி குறிப்பிட்;டுள்ளார்.

 

-tw