அல்கொய்தாவுடன் தொடர்பு வைத்துள்ள இலங்கை பிரபல வர்த்தகர் – அமெரிக்கா தடை விதிக்கும் அபாயம்

அமெரிக்க அதிகாரிகளால் அல்-கொய்தா பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இலங்கை தொழிலதிபர், சில ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்தார்.

எனினும் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இலங்கை அதிகாரிகளால் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பேருவளையில் வசிக்கும் தொழிலதிபர் மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார், அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்தால் (OFAC) கடந்த புதனன்று தடை செய்யப்பட்டார்.

அல் கொய்தாவுக்கு நிதியளித்த அஹ்மத் லுக்மான் தாலிப் (தாலிப்) என்பவருடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தொழிலதிபர் தொடர்பில் தகவல்களை சில காலத்திற்கு முன்பு பொலிஸாரிடம் சமர்ப்பித்தனர்.

நிசார் ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், வெளிநாட்டு பண பரிமாற்றம் செய்பவராக மனித கடத்தல் மற்றும் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

அவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீதி நிர்மாணம் மற்றும் நிர்மாண செயற்பாடுகள் மற்றும் கட்டிட பொருட்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவலறிந்த தரப்புகள் தெரிவித்துள்ளன.

நிசார், ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள மடகாஸ்கரில் வணிகங்களைக் கொண்ட ஒரு ரத்தின வியாபாரி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கையில் வசிக்கவில்லை என்றும், துபாயில் வசிக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை அமெரிக்க தடையை அடுத்து, இலங்கையின் வங்கிகள் மற்றும் நிதியல்லாத வணிகங்கள் மற்றும் தொழில்கள், நிசாருக்குச் சொந்தமான கணக்குகளை முடக்குவதற்கு தயாராவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், குறித்த வர்த்தகர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஒரு நாடாக இலங்கையும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது என்று மூத்த வங்கியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

-tw