மத்திய வங்கியின் ஆளுநரை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும்- கம்மன்பில

இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் காலத்திலேயே அதிகளவில் பணம் அச்சிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நந்தலால் வீரசிங்கவின் 175 நாள் பதவிக்காலத்தில் 590 பில்லியன் ரூபா அச்சடிப்பு

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் டப்ளியூ.டி. லக்ஷ்மனின் 551 நாள் பதவிக்காலத்தில் ஆயிரத்து 260 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது. அஜித் நிவாட் கப்ராலின் 203 நாள் பதவிக்காலத்தில் 446 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது.

பணத்தை அச்சிட்டதன் காரணமாக நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக கூறும் நந்தலால் வீரசிங்கவின் 175 நாள் பதவிக்காலத்தில் 590 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுநரை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்

இது அஜித் நிவாட் கப்ராலின் காலத்தில் ஒரு நாளில் அச்சிடப்பட்ட பணத்தை விட 55 மடங்கு அதிகம். அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்கவும் சமுர்த்தி கொடுப்பனவு போன்றவற்றை வழங்கவும் இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் பணத்தை அச்சிடும் செயலுக்கு அடிமையாகி இருப்பதால், அவரை கந்தாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

-tw