இறுதிக் கட்டப் போரின்போது சரணடைந்த விடுதலைப் புலிகளைக் கொன்று விடுமாறு இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே உத்தரவிட்டார் என இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மீது போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்திய முன்னாள் இராணுவ உயரதிகாரி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேஜர் ஜனரலாக பதவி வகித்த குறித்த இராணுவ அதிகாரி சத்தியக் கடதாசி ஒன்றின் மூலம் இலங்கைப் படையினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வெளிநாட்டில் பிரசாரம் செய்துள்ளார். இந்நிலையில் குறித்த அதிகாரிக்கு அமெரிக்கா புகலிடம் வழங்கியுள்ளது.
எனினும், இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய 58-ம் இராணுவப் படைப் பிரிவைச் சேர்ந்த எந்தவொரு உயரதிகாரியும் அமெரிக்காவிற்கு தப்பிச் செல்லவில்லை என்று ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் துணைத் தூதர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், போலி இராணுவ அதிகாரிகள் தோன்றி இலங்கை அரசுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரி அமெரிக்காவில் இருந்து கொண்டு இலண்டனில் இருந்து வெளிவரும் ‘த டெலிகிராப்’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், போரின்போது முள்ளிவாய்க்காலில் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை கோத்தபாயவின் உத்தரவின் பேரிலேயே படையினர் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியிட்டிருந்தார்.