இலங்கையர்கள் இந்திய ரூபாயை வைத்திருக்க புதிய நடைமுறை

இலங்கையர்கள் 10,000 டொலர் மதிப்புள்ள இந்திய ரூபாயை (INR) வைத்திருக்க அனுமதிக்கும் புதிய ஒழுங்குமுறைக்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள அங்கீகாரம்

இந்திய ரூபாயை வெளிநாட்டு நாணயமாக அனுமதிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், டொலரை சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையில் வசிப்பவர்கள் இப்போது இந்திய ரூபாயை மற்றொரு நாணயமாக மாற்ற முடியும் என்றும், இதை செயல்படுத்துவதற்கு இலங்கை வங்கிகள் இந்திய வங்கியுடன் “INR நொஸ்ட்ரோ கணக்குகளை” ஆரம்பிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடல்கடந்த வங்கி அலகுகள்

இலங்கை வங்கிகளின் கடல்கடந்த வங்கி அலகுகள் (OBU) வதிவிடமில்லாதவர்களிடம் இருந்தும் சேமிப்பு மற்றும் வைப்புகளை ஏற்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது மற்றொரு முக்கியமான அம்சமாகும் என இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

ஊடக அறிக்கைகளின்படி, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பணம் அனுப்புதல் உட்பட அனைத்து நடப்புக் கணக்கு பரிவர்த்தனைகளும் இலங்கையில் வசிப்பவர்கள் மற்றும் வசிக்காதவர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படலாம்.

இந்த ஏற்பாட்டை சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா அங்கீகரித்த போதிலும், இலங்கை மத்திய வங்கி ரூபாவை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அறிவிக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

 

-tw