இலங்கை அறிக்கைகைய நிராகரித்தது அனைத்துலகக் குழு!

மகிந்த ராஜபக்சேவின் நல்லிணக்க ஆணைக்குழு தயாரித்துள்ள அறிக்கையை ICG எனப்படும் அனைத்துலக நெருக்கடிக் குழு (International Crisis Group -ICG)  நிராகரித்துள்ளது.

இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த மகிந்த ராஜபக்சேவினால் பணிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையை ICG நிராகரித்துள்ளதுடன். போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுதந்திரமான அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

அரசாட்சி, காணி விவகாரங்கள் மற்றும் அரசியல் தீர்வின அவசியம் குறித்து அறிவுசார்ந்த பரிந்துரைகளை முன்வைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு முக்கியமானதொரு விடயமான அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரும் ஐ.நா மற்றும் அதன் பங்காளர்களின் கோரிக்கையைக் கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளதாக ICG சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் 2012-ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மூலம் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவொன்றை உருவாக்குவதே அனைத்துலக சமூகத்துக்கு இப்போதுள்ள கடமையாகும். இத்தகைய விசாரணை இல்லாமல், போரின் இறுதியில் இடம்பெற்ற குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கு அதிகபட்சம் சாத்தியமில்லை என ICG கூறுகிறது.

போரின் போது பொதுமக்களுக்கு இழப்புகள் இன்றியோ அல்லது மிகக் குறைந்தளவிலான இழப்புகளுடனோ போர் நடத்தப்பட்டதாக சிறீலங்கா அரசாங்கம் மோசமான பரப்புரைகளை மேற்கொண்டு வந்த போதிலும், பொதுமக்கள் மீதான எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் பாரிய படுகொலைகள் பற்றி முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு புறக்கணித்துள்ளது என்று அவ்வமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்துடன் போரைத் திட்டமிட்டு நிறைவேற்றிய இலங்கை அரசாங்கம் மற்றும் இன அழிப்பை மேற்கொண்ட சிங்கள் இராணுவத்தை  பாதுகாக்கும் நோக்கில் ஆணைக்குழு செயற்பட்டுள்ளது. பல காரணங்களுக்காக இந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளதக்கதொன்றாக அமையவில்லை என அது மேலும் கூறுகிறது.

சிறீலங்கா அரசினது ஆவணங்களை மட்டும் ஆணைக்குழு கருத்தில் கொண்டுள்ளது என்பதை அறிக்கை முழுவதும் வெளிப்படையதாகத் தெரிகிறது. அரசாங்கத்தின் தகவல்கள் சுதந்திரமான முறையில் ஆய்வு செய்யப்படவில்லை.

அதேபோல பாதுகாப்பற்ற நிலை உள்ளதால், போரின் இறுதிகட்டத்தில் போர் நடைபெற்ற பிரதேசத்தினுள் வாழ்ந்த ஆயிரக்கணக்கான சாட்சிகள் இலங்கை நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முன்வரவில்லை என்றும் போர் வலயத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பான எந்தக் குறிப்பும் இல்லை என்றும் அகைத்துலக நெருக்கடிக் குழு குறிப்பிட்டுள்ளது.

TAGS: