கொழும்பு – லோட்டஸ் வீதிப் பகுதியில் அனைத்து தொழிற்சங்க கூட்டணிகளும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.
ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் பிரதான வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை காலிமுகத்திடல் பகுதியிலும் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தொழிற்சங்கத்தினர் இணைந்து கொழும்பின் பல இடங்களில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
கொழும்பை சுற்றிவளைக்கும் வகையில் பல பகுதிகளில் இருந்து இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையில் ஆர்ப்பாட்டம்
அரசாங்கத்தின் தன்னிச்சையான வரித் திருத்தம் மற்றும் நாட்டின் வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெருந்திரளானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையில் பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டம் பேரணியாக முன்னெடுக்கப்படவுள்ளதன் காரணமாக கொழும்பில் பல வீதிகள் இன்று (20.01.2023) முற்றாக மூடப்பட்டுள்ளன.
இதன்படி, கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து காலிமுகத்திடல் வீதி மற்றும் கொழும்பு சுதந்திர மாவத்தை ஆகியன பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளன.
இந்த வீதிகளை பயன்படுத்தும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், கொழும்பின் பல பகுதிகளில் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-tw