சீனா தொடர்பில் போலியான பீதியை கிளப்ப வேண்டாம்-அமெரிக்க தூதுவரிடம் கோரிக்கை விடுக்கும் சிங்கள தேசியவாத அமைப்பு

இலங்கைக்குள் சீனா தொடர்பாக போலியான பீதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என சிங்கள தேசியவாத அமைப்பான தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்க முயற்சி

சீன அரசின் நடவடிக்கைகளே இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நெருக்கடி அதிகரிக்க காரணம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐக்கிய ராஜ்ஜியத்தின் தொலைக்காட்சி ஒன்றிடம் கூறியிருந்தார்.

இது தொடர்பான இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள குணதாச அமரசேகர, இலங்கைக்குள் சீனா தொடர்பில் போலியான பீதியை உருவாக்க முயற்சிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவுக்கு எதிராக குற்றம் சுமத்துவதன் மூலம் அந்நாட்டுக்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்ப்பை உருவாக்கவும் சீன அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் பரஸ்பர எதிர்ப்பை உருவாக்க நீங்கள் முயற்சித்துள்ளீர்கள் என்ற நியாயமான குற்றச்சாட்டை சுமத்த முடியும்.

சீன அரசாங்கம், இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பொது கொள்கைக்கு அமைய ஒத்துழைப்பு வழங்க ஏற்கனவே இணங்கியுள்ளது.

இதனை தவிர எரிபொருள், மருந்து, உணவு, பாடசாலை சீருடை போன்ற பெரிய உதவிகளை வழங்கி நெருக்கடியை எதிர்நோக்கும் மக்களுக்கும் அரசுக்கும் சீனா ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறது.

இலங்கையை மேலும் நெருக்கடிக்குள் தள்ள முயற்சி

நீங்கள் இவற்றுக்கு தடையேற்படுத்தி, இலங்கையை மேலும் நெருக்கடிக்குள் தள்ள முயற்சித்து வருகின்றீர்களோ என்ற கேள்வியை எழுப்புகிறோம்.

இலங்கையில் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்ற நீங்கள் மேற்கொண்ட தலையீடுகள் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைய இவ்வாறான கேள்வியை எழுப்புவது தர்க்க ரீதியானது.

சீன எதிர்ப்பை உருவாக்குவதன் மூலம் கடன் மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றோம்.

சீன மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் நெடுங்காலமாக இருந்து வரும் நட்புறவை சீர்குலைத்து அதன் மூலம் இந்திய-பசுபிக் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவான பூகோள ரீதியான அரசியல் தேவைகளை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் குணதாச அமரசேகர, இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

-tw