பின்வாசல் வழியாக அரசாங்கத்தின் ஆட்சியை முன்னெடுக்கும் ராஜபக்சவினருக்கு இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தை கற்பிக்க போவதாக 43வது படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை நேற்று முன்தினம் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அச்சம் காரணமாக தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கும் அரசாங்கம்
தேர்தல் தொடர்பில் அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், அதனை ஒத்திவைக்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. அரசாங்கத்தின் இந்த முயற்சி இன்னும் முடியவில்லை.
எனினும் அரசாங்கம் தேர்தலை நடத்தும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். தேர்தலை நடத்துவற்கு பணம் இல்லை என்பது எந்த விதத்திலும் காரணமாக அமையாது.
அத்துடன் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டம் பெரிய சிக்கலான சட்டமில்லை. குறுகிய காலத்தில் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டத்திட்டங்களை தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிட வேண்டும்.
மக்கள் ஆட்சியில் இருந்து இறக்கிய ராஜபக்சவினர் பின்வாசல் வழியாக ஆட்சியை முன்னெடுக்கின்றனர்
கடந்த ஆண்டு நாட்டு வங்குரோத்து அடைந்தது. இதனையடுத்து கடந்த மே மாதம் 9 ஆம் திகதி மக்கள் பொதுஜன பெரமுனவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்கள் நேரடியான போராட்டத்தின் மூலம் அதிகாரத்தில் இருந்து இறக்கினர்.
ஜூலை 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து இறக்கினர். தற்போது இவர்கள் பின்வாசல் வழியாக வந்து உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகளை ஆளுநர்கள் ஊடாகவும் கட்டுப்படுத்துவதுடன் நாடாளுமன்றத்தையும் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
-tw