இலங்கையும் இந்தியாவும் இரு நாடுகளின் முன்னேற்றத்திற்காக ஒத்துழைப்போடு கைகோர்க்க வேண்டும் – கோபால் பாக்லே

சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை இந்தியா 2047 இலும் இலங்கை 2048 இலும் கொண்டாடவுள்ள நிலையில் இலங்கை, இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் இன்றிணைந்து செயற்பட வேண்டியது மிக முக்கியம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (24) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தின் ரிதம்

‘நல்லிணக்கத்தின் ரிதம்’ என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு இந்தியாவின் நாகலாந்து பிரதேசத்தில் உருவான உலகப் புகழ்பெற்ற UDX இசைக்சுழுவும் இலங்கை Heavy metal Quintet Band Stigmata இசைக்குழுவும் இணைந்து இந்த இசை நிகழ்சியை நடத்தின.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவு, சமாதானம் மற்றும் சுபீட்சம் என்பன தொடர்பிலான இருநாட்டு எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் இரு இசைக்குழுக்களும் தெரிவு செய்யப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகர் தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர்,

75 ஆவது சுதந்திர தினம்

“இந்தியா வளர்ந்து வரும் பொருளாதாரத்தையும் பல்வகைமையுடைய ஜனநாயகத்தையும் கொண்டுள்ள நாடாகும். இந்த நிலைமை இலங்கைக்கும் பொதுவானாதாகும். மேலும் இலங்கை இன்னும் சில நாட்களில் தனது 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்ற அடிப்படையில் நாம் இந்நிகழ்வை ஒற்றுமையின் உண்மையான ரிதமாக கொண்டாட வேண்டும். இது வெவ்வேறு இசைக் குழுக்களின் இசைச் சங்கமம் மட்டுமல்ல இது இலங்கை மற்றும் இந்தியாவின் ஒற்றுமையையும் குறிக்கும்.

75 ஆவது சுதந்திர தினத்துடன் நாமும் எமது ஒற்றுமை மற்றும் 75 வருட இராஜதந்திர உறவைக் கொண்டாடுவதுடன் எமது நூற்றாண்டு சுதந்திர விழாவை நோக்கிய எமது பயணத்துக்காக எம்மை மீண்டும் அர்ப்பணிப்போம் என்றும் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், விஞ்ஞானிகள், இராஜதந்திரிகள், அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமன்றி சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இப்பயணத்தில் பங்கு வகிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், சாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை , இந்தியப் பிரஜைகள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

 

 

-tw