துப்பாக்கிகளுடன் வந்த ரஷ்ய தம்பதி இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினர் இன்று (25) மதியம் பொம்மை கைத்துப்பாக்கிகள் என இரண்டு சாதனங்களை வைத்திருந்ததாக தெரிவித்து மூவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ரஷ்ய தம்பதியொருவர் கொண்டு வந்த சூட்கேஸில் இருந்து இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருபவர்கள்

33 வயதான இந்த ரஷ்ய பிரஜை, தனது 26 வயதான ரஷ்ய மனைவி மற்றும் 09 வயது மகனுடன் ரஷ்யாவின் மொஸ்கோவிற்கு செல்வதற்காக இன்று மதியம் 12.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இவர்கள் கொழும்பு-05 பகுதியில் வசிப்பதாகவும், ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து ஐ.டி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் பிரவேசித்த போது அவர்களின் பயணப் பொதிகளில் இந்தக் கருவிகள் இருந்தன. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவை கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று அவ்விடத்திற்கு வந்து இந்த ரஷ்யர்களை தடுத்து நிறுத்தியது.

பொம்மை துப்பாக்கி

இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினர் தெரிவிக்கையில்,​​இந்த பொம்மை துப்பாக்கிகளில் தோட்டாக்களை வெளியிடும் தூண்டல் இல்லை என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் தோட்டாக்கள் பயணிக்கும் குழாய் இரும்பினால் ஆனது என்பதில் சந்தேகம் இருப்பதாக பேச்சாளர் கூறியுள்ளார்.

எனவே, இந்தக் கருவிகளை மேலதிக பரிசோதனைக்காக நாளை (26) கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் சமர்ப்பிக்க கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர்.

பரிசோதனை முடிவின் அடிப்படையில், இந்த ரஷ்யர்கள் தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறித்த ரஷ்யர்கள் சார்பில் சட்டத்தரணி ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறைக்கு வந்துள்ளார்.

நீர்கொழும்பு காவல்துறை அத்தியட்சகர் எரிக் பெரேராவின் பணிப்புரையின் பிரகாரம் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை பிரிவின் பிரதான காவல்துறை பரிசோதகர் சேனாதீரவின் மேற்பார்வையில் பிரதி காவல்துறை பரிசோதகர் சுகத் ரோஹன மற்றும் காவல்துறை சார்ஜன்ட் (38226) திஸாநாயக்க ஆகியோர் இந்த பரிசோதனையில் ஈடுபட்டனர்.

 

 

-ibc