இலங்கை தமிழர் தாயகத்தில் சுதந்திர மீட்சிக்கான போராட்டம்:தமிழர்களை ஒன்றுபடுமாறு அழைப்பு

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து எழுச்சிப் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர்.

கடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி போராட்டத்தின் பின்னர் மீண்டும் வடக்கு கிழக்கு தாயக மக்கள் தங்களின் சுதந்திர தாகத்தை இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தும் போராட்டமாக இந்த போராட்டம் எழுச்சி பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியத்தின் எழுச்சியை பறைசாற்றல்

தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள உள்ள நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு தமிழர்களின் சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் தேசியத்தின் எழுச்சியை பறைசாற்றும் வகையில் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்தில் தாயகத்தில் உள்ள தமிழர்களும் அவர்களுக்கு துணையாக புலம்பெயர் தமிழர்களும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கும் இப்போராட்டமானது கிழக்கில் மட்டக்களப்பு வரை முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழர்கள் ஒன்றுபடுமாறு அழைப்பு

இப்போராட்டத்தில் தமிழர்கள் அனைவரும் அலையாக திரண்டு வந்து இணைந்து கொண்டு தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை சர்வதேச சமூகத்திற்கு ஜனநாயக வழியில் தெரிவிப்பதற்காக ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இப்போராட்டத்திற்கு தமிழர் தாயகத்தில் இருக்கும் மாணவர் சமூகங்கள், சிவில் சமூக அமைப்புகள், மதப் பெரியார்கள், தமிழ் தேசியக் கட்சிகள், ஊடகவியலாளர்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் என அனைவரும் பங்குபற்றி தங்களது ஆதரவை வெளிக்காட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தை மாபெரும் மக்கள் எழுச்சி கொண்ட ஜனநாயக எழுச்சி போராட்டமாக மாற்ற வேண்டும்.

இதற்காக வடகிழக்கு உள்ள அனைவரும் இணைந்து தமிழர்களின் சுதந்திரத்திற்காக மீண்டும் ஒன்றுப்படுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

 

-tw