கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவிற்கு ஆதரவு அளிக்குமாறு இலங்கை அரசாங்கம் வேண்டுகோள்

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவிற்கு நன்கொடையாளர்கள் ஆதரவு அளிக்குமாறு இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதன் பின்னர் இந்தியாவில் இருந்து வரும் மக்கள் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

நிதி நெருக்கடி

இந்தநிலையில் எதிர்வரும் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் நடைபெறும் தேவாலய திருவிழாக்களில் மொத்தம் 8,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 3,500 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். முந்தைய ஆண்டுகளில் அங்கு வரும் அடியார்களுக்கு உணவு மற்றும் பிற குளிர்பானங்கள் வழங்கப்பட்ட நிலையில், பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, இந்த ஆண்டு உணவு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், புனித அந்தோணியார் தேவாலயத்தில் பிரார்த்தனைக்காக வரும் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு மார்ச் 4 ஆம் திகதியன்று காலை உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

மார்ச் 3ஆம் திகதி கொடியேற்றத்திற்குப் பிறகு திருவிழா ஆரம்பமாகும். திருவிழாவின் நிறைவாக மார்ச் 4 ஆம் திகதி இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலிருந்து பங்கேற்கும் அருட்தந்தையர்களின் மாபெரும் நற்கருணை நடைபெறும்.

யாழ்.மாவட்ட ஆட்சியர் சிவபாதசுந்தரம், இதேவேளை இந்த தடைவ, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை 8,000 ஆக மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், யாத்திரிகர்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கான ஏற்பாடுகளை அவர்களே செய்ய வேண்டும் எனவும் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் சிவபாதசுந்தரம் தெரிவித்துள்ளார்.

ஆர்வமுள்ள புரவலர்கள் கச்சத்தீவு திருவிழாவிற்கு நன்கொடை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

-tw