இனப்பிரச்சினைக்கு தீர்வு என குறிப்பிட்ட ரணில் 13 ஆம் திருத்தத்தில் மௌனம்

அதிபர் ரணில் விக்ரமசிங்க, இன்றைய அக்கிராசன உரையில் 13 ஆவது அரசியமைப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்ட்ட போதிலும் பௌத்த பிக்குமாரின் எதிர்ப்பு போராட்டத்திற்கு மத்தியில் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய விடயங்களை முன்வைப்பதை தவிர்த்து கொண்டமை தமிழ் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் அவரது உரையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என என பலரும் எதிர்வுகூறியிருந்த போதிலும் ரணில் விக்ரமசிங்க அதனையும் தனது அக்கிராசன உரையில் உள்ளடக்கியிருக்கவில்லை.

இந்த நிலையில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மத பீடங்கள் தலையீடு

இலங்கையில் மதம் சார்ந்த விடயங்களை தாண்டி, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பௌத்த மத பீடங்கள் தலையீடு செய்துவருகின்றமை நாட்டை பின்னடைவை நோக்கி தள்ளியுள்ள நிலையில், தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வாக தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதையும் அவர்கள் தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் உறுதி வழங்கப்பட்ட 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக கொழும்பில் இன்று பௌத்த பிக்குகளும் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் பதிலளிப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒரு வாரத்திற்கு காலக்கெடுவை வழங்கிய பௌத்த பிக்குகள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.

கொழும்பு – பத்தரமுல்லை பகுதியில் பௌத்த பிக்குகளால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரத்தன தேரர் உள்ளிட்ட 5 ஆயிரம் பிக்குகள் கலந்து கொண்டிருந்தனர்.

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்த நீ்க்கம்

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ள நிலையில், அந்த திருத்தத்தை முழுமையாக நீக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த இடத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினருடன் தேரர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டிருந்ததுடன், அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்றதையடுத்து பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஒரு வாரத்திற்குள் தங்கள் கோரிக்கைக்கான தீர்வு கிடைக்காவிடின் ஆயிரக்கணக்கான பிக்குமாரை ஒன்றிணைத்து மிகிந்தலையில் இருந்து பாரிய போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

எவ்வாறாயினும் அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்திற்கு மேலான அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் என பௌத்தப்பிக்குகள் சிலர் நேற்றைய தினம் அறிவித்திருந்தனர்.

தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு நேற்று யாழ்ப்பாணத்துக்கு சென்ற இதனை அறிவித்த நிலையில், இன்றைய தினம் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

-ib