இலங்கைக்கு வெளியே தமிழீழத்தை நிறுவியுள்ள வடக்கு தமிழ் பிரிவினைவாதிகளுக்கு காவல்துறை அதிகாரத்தை வழங்குவது ஆபத்தானது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி, சுயாதீனமான செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாகாண இணைப்பு தொடர்பான சரத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கும் பட்சத்திலேயே முஸ்லிம் மக்களை வடக்கிற்கு காட்டிக் கொடுக்காமல் இருக்க முடியும் எனவும் அதற்கு தம்முடன் ரவூப் ஹக்கீம் கைகோர்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் உரையாற்றிய அவர், “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பது.அதற்காக தனி மாகாண சபையை உருவாக்குவது.
மாகாண இணைப்பு
எமது அரசியலமைப்பில் மாகாணங்கள் ஒன்று அல்லது மூன்று, ஒன்றிணைந்து தனியான மாகாண சபையை அமைக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இணைத்து தனி மாகாணத்தை உருவாக்கியது, அவசர காலச் சட்டத்தின் கீழாகும். அவசர கால சட்டம் நீக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கு இணைப்பும் காலாவதியாகியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அன்று வடக்கு கிழக்கு இணைப்பு அகற்றப்பட்டாலும் ஒன்றிணைக்கும் சரத்து, எமது அரசியலமைப்பில் இருக்கும் வரை 13 ஆவது அரசியலமைபை முழுமையாக நடைமுறைப்படுத்துவதானது, மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கை இணைப்பதற்கு சமமானது.
கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்களே காணப்படுகின்றார்கள். கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள், வடக்கிற்கு காட்டி கொடுப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா என்பதை முஸ்லிம் காங்கிரஸ்சின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கேட்க விரும்புகின்றோம்.
அவ்வாறு இணங்காத பட்சத்தில் மாகாணங்களை இணைக்கும் சரத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என நான் யோசனை முன்வைக்கின்றேன்.
பிரிவினைவாத மனதுள்ள வடக்கு மாகாண சபைக்கு தொல்பொருள் விடயங்கள் பொறுப்பளிக்கப்படுவது என்பது நரியிடம் கோழியை கையளிப்பதற்கு சமமான நடவடிக்கையாகும்.
அதேபோன்று 13 ஆவது அரசியலமைப்பில் இதுவரை நடைமுறைப்படுத்தாத விடயமே காவல்துறை அதிகாரம்.ஜே.ஆர். ஜனவர்தன உட்பட முன்னாள் ஜஅதிபர்கள் ஏழு பேர், காவல்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்காமல் இருந்ததில் மிகவும் முக்கியமான காரணங்கள் இருந்தன.
தமிழ் பிரிவினைவாதம் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டாலும் இலங்கைக்கு வெளியே முன்னரை விட மிகவும் சிறப்பாக இயங்குகின்றனர்.
இலங்கைக்கு வெளியே தமிழீழம்
இலங்கைக்குள் முடியாவிட்டாலும் இலங்கைக்கு வெளியே தமிழீழம் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது. நாடு கடந்த தமிழீழம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிரதமராக விடுதலைப் புலிகளின் பிரதான சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் இருக்கிறார்.
அவர் நாடுகளுக்கு சென்று, அரச தலைவர்களை சந்தித்து, இலங்கையில் தமிழீழத்தை நிர்மாணிப்பதற்கு ஆதரவு வழங்குமாறு கோருகின்றார்.
இடமில்லாத ஒரு அரசாங்கமாகவே கிழக்கு தீமோர், பலஸ்தீன் உருவாவதற்கு முன்னர் இருந்தன. இன்றும் தலாய் லாமா, திபேத்திய அரசாங்கம் இடமில்லாத அரசாங்கமாகவே இருக்கின்றது.
ஆகவே கிழக்கு திமோர், பலஸ்தீன், போன்றே விஸ்வகுமாரன் உருத்திரகுமாரனின் தலைமையில் தமிழீழ அரசாங்கம் பயணிக்கின்றது” – என்றார்.
-ib