தேர்தல் நடாத்தாவிட்டால் இது அசமந்த அரசாங்கமாகவே கருதப்படும் – பெப்ரல் அமைப்பு பகிரங்கம்

தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு , அம்பாறை திருகோணமலை போன்ற மாவட்டங்களில் தங்களது கண்காணிப்பு பணிகளை இன்றிலிருந்து ஆரம்பிக்க உள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்ற பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று(12) மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”வருகின்ற 22ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்பு மூன்று தினங்களுக்கு இடம் பெற இருப்பதால் அதற்கான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள சகல ஏற்பாடுகளும் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான பணம்

தேர்தல் குறித்து தேர்தல் திணைக்களம் சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. ஆனால் இன்று வரை தேர்தலுக்கான பணம் தொடர்பாக நிதிஅமைச்சு மட்டத்திலிருந்து எந்த விதமான பதில்களும் வராத காரணத்தினால் அது ஒரு சவாலாக இருக்கின்றது.

நாங்கள் நிதி அமைச்சுக்கு ஒன்றை சொல்ல விரும்புகின்றோம். தேர்தல் நடத்துவதற்கு பணம் வழங்க வேண்டியது உங்களது பொறுப்பு. ஆனால் இந்த நாட்டில் ஜனநாயகத்தின் அடிப்படையில் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

ஆகவே அந்த தேர்தலுக்கான பணத்தை உடனடியாக தேரல் திணைக்களத்துக்கு வழங்க வேண்டும். அரசியல் அமைப்பின் பிரகாரம் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகளை நிதி அமைச்சு பொறுப்பெடுக்காத பட்சத்தில் சட்டரீதியான அணுகுமுறைகளை நாட வேண்டி ஏற்படும்.

10 மில்லியன் ரூபாய்

இந்தப் நிதியானது நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட நிதி அதை உட நடியாக வழங்க வேண்டிய பொறுப்பு நிதி அமைச்சுக்கு இருக்கின்றது. குறித்த நிதியை உடனடியாக தேர்தல் திணைக்களத்துக்கு வழங்க வேண்டும்.

சுயாதீனமாக தேர்தல் நடத்த வேண்டுமாக இருந்தால் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை வழங்கும் பட்சத்தில் ஒரு சுயாதீனமான தேர்தலை நடத்த முடியும். தேர்தல் கண்காணிப்பகம் என்ற ரீதியில் நாங்கள் இந்த கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைக்கின்றோம்.

தேர்தலுக்கான 10 மில்லியன் ரூபாய் பணத்தை தேர்தல் திணைக்களத்துக்கு வழங்காத பட்சத்தில் உண்மையில் இந்த அரசாங்கம் ஒரு அசம்பந்த அரசாங்கம் என்றே கூற முடியும்.

அசம்பந்த அதிகாரிகள் என்றுதான் கூற முடியும். ஆகவே மக்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற இந்த அரசாங்கமும் நிதி அமைச்சரும் நிதியை வழங்கிய தேர்தலை நடத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

 

 

-ib