இலங்கையில் உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்த உலக உணவுத்திட்டம் உதவி

இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள 244,000 பேருக்கு பெப்ரவரி – மேமாதம் வரையான காலப்பகுதியில் அவசியமான நிதியுதவிகளை வழங்க எதிர்பார்த்திருப்பதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மீட்சியடையாத நிலையில், அதன்விளைவாக உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருகின்றது. அதேவேளை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அமைப்புக்களான உலக உணவுத்திட்டம், உணவு மற்றும் விவசாய அமைப்பு, யுனிசெப் அமைப்பு என்பன உள்ளடங்கலாக பல்வேறு சர்வதேச பொதுக்கட்டமைப்புக்கள் அத்தியாவசிய உதவிகளை வழங்கிவருகின்றன.

அந்தவகையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு தற்போதுவரை வழங்கப்பட்டுள்ள உதவிகள் குறித்து உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட தரவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவ்வறிக்கையிலுள்ள தரவுகளின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் 37 சதவீதமானோர் உணவுப்பாதுகாப்பின்மை நிலைக்கு முகங்கொடுத்திருப்பதுடன் கடந்த ஆண்டு ஜுன் மாதம் உலக உணவுத்திட்டத்தின் அவசர உதவி வழங்கல் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தற்போதுவரை சுமார் 1.8 மில்லியன் மக்களுக்கு அவசியமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-if