இலங்கையில் தமிழின அழிப்பில் பங்குகொண்டவர்களை உலகநீதிமன்றில் நிறுத்த வேண்டும்

இலங்கையில் தமிழ் இன அழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றங்களான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு காத்திரமான முறையில் கொண்டு செல்லும் முயற்சிகளை கனடா ஆரம்பிக்க வேண்டும் என கனடாவின் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கனடிய பாராளுமன்றில் நடைபெற்ற தமிழ் மரபுத்திங்கள் விழாவின் இறுதி நாள் நிகழ்வில் கனடிய பிரதமர் உட்பட கனடாவின் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றி இருந்தனர்.

இந்த நிகழ்வில் கனடாவின் எல்லா பாகங்களிலும் இருந்து பெருமளவான தமிழ் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே கனடாவின் எதிர்க்கட்சி தலைவர் Hon.Pierre Poilievre  இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை

மேலும் கூறுகையில்,ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசாங்கம் நடத்திய இன அழிப்பு நடவடிக்கைகளுக்கான நிரந்தர நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையில் பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதிக்கான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இலங்கையில் தமிழ் இன அழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றங்களான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு (International Court of Justice) காத்திரமான முறையில் கொண்டு செல்லும் முயற்சிகளை கனடா ஆரம்பிக்க வேண்டும்.

தற்போதைய இலங்கை அரச தலைவர்கள் மீதான தடை ஒரு சிறிய முன் செயலாகவும் எதிர்காலத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களின் பெயர்களையும் உள்ளடக்க வேண்டும்.

அவர்கள் மீது பாரிய வழக்குகளை கொண்டு வரவேண்டும் எனவும் இப்படியான நீதியை தமிழர்களுக்கு பெற்று கொடுப்பதால் தான் எதிர்காலத்தில் இலங்கையில் மனித உரிமை பாதுகாக்கபடும் எனவும் குறிப்பிட்டார்.

 

 

-tw