இலங்கையில் இருந்து 2000 பெண் பராமரிப்பாளர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

இலங்கைக்கு வந்துள்ள இஸ்ரேலின் சிறப்பு தூதுக்குழுவொன்று, இந்த வருடம் இலங்கையில் இருந்து பெண் பராமரிப்பாளர்களுக்கு 2000 வேலை வாய்ப்புகளை வழங்குவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் உறுதியளித்துள்ளது.

இஸ்ரேலின் மக்கள்தொகை மற்றும் இடம்பெயர்வு நிறுவனத்தின் பணிப்பாளர் ஷீலி ரெய்சின் சாசன் மற்றும் உறுப்பினர்களான ஜிந்தானி மேரி, யாக்கோ கபிலாவ், மார்கரிட்டா கரோட்னிட்ஸ்கி உள்ளிட்ட குழுவினர் இன்று அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையில் இருந்து பராமரிப்பாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குமாறு தூதுக்குழுவினரிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்ததுடன், அதற்கு பதிலளித்த குழுவினர், இந்த ஆண்டு இலங்கையில் இருந்து 2000 பெண் பராமரிப்பாளர்களை தங்கள் நாட்டில் சேர்த்துக்கொள்வதாக அமைச்சரிடம் உறுதியளித்தனர்.

இஸ்ரேலில் தற்போதுள்ள கலாசாரத்தின் பிரகாரம் நோயாளர்களைப் பராமரிப்பதற்கு பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், ஆண் பராமரிப்பாளர்களுக்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பதாகவும், அதற்கமைய, பயிற்சிகளை வழங்கும்போது பெண்களுக்கு முன்னுரிமை வழங்குமாறும் அமைச்சரிடம் தூதுக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பராமரிப்பாளர் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். இதன்படி, உரிய தகுதிகளை பூர்த்தி செய்பவர்களே பயிற்சிக்கு உள்வாங்கப்படுவார்கள் என அமைச்சர் தூதுக்குழுவிடம் உறுதியளித்தார்.

இங்கு, நிபுணத்துவப் பயிற்சி பெற்ற ஆங்கில மொழிப் புலமை கொண்ட இலங்கைப் பணியாளர்களுக்கு இஸ்ரேலிய வேலை வாய்ப்புக்கான வாய்ப்பு எப்போதும் கிடைக்கும் என இஸ்ரேலிய பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

 

 

-if