இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா

கண்டி ஹந்தானையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது புலம்பெயர் (சர்வதேச) பறவைகள் பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  திறந்து வைத்துள்ளார்.

ஹந்தானை தேயிலை அருங்காட்சியக வளாகத்திற்கு அருகில் 27 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த சர்வதேச பறவை பூங்கா மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா வலயம், 100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகளின் இருப்பிடமாக உள்ளது.

490 மில்லியன் ரூபா செலவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இப்பறவை பூங்காவில் வெளிநாட்டுப் பறவைகள் பெரிய கூடுகளில் பராமரிக்கப்படுவதோடு, அவற்றைப் பராமரிப்பதற்கு சுமார் 100 பணியாளர்களும் உள்ளனர்.

40 ஆண்டுகால “இலங்கையை பூர்வீகமாகக் கொண்டிராத பறவைகள் பற்றிய ஆய்வின்” அடிப்படையில் இந்த பூங்கா நிறுவப்பட்டுள்ளது.

பல வெளிநாட்டுப் பறவைகள் இலங்கையில் இனப்பெருக்கம் செய்ய முடிந்திருப்பது விசேட அம்சமாகும்.

முதற்கட்டமாக, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புலம்பெயர்ந்த பறவைகளைப் பார்ப்பதற்கான வசதிகள், விலங்கியல் மாணவர்களுக்கான கல்விப் பயிற்சி மையம், பறவைகள் சரணாலயம், பறவைகள் இல்லம் மற்றும் தனிமைப்படுத்தல் பிரிவு என்பன ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்த, அனுராத ஜயரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கோட்டேகொட, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

-jv