“மேற்குலகம் என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது, அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை” என்று இலங்கை குடியரசு தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘டக்கன் குரோனிக்கல்’ நாளேட்டிற்கு அளித்த நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீங்கள் முன்வைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனை பயனற்றது என்றும், அதுபோன்ற பல குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்ட போதும், அரசியல் பிரச்னைகள் இன்னமும் உள்ளதாக பலரும் கூறுகின்றனரே? என பத்திரிக்கையார் மகிந்த ராஜபக்சேவிடம் வினவியபோது;
சிக்கலான எந்தப் பிரச்னைக்கும் ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்தின் மூலம் தீர்வு காண நாடாளுமன்றத் தெரிவுக்குழு நல்லதொரு அணுக்குமுறை. துரதிஸ்டவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பிரதிநிதிகளின் பெயரைகளை முன்வைக்கவில்லை. அவர்கள் விடுதலைப் புலிகளின் அதே மனோபாவத்துடனேயே உள்ளனர். அவர்களின் கோரிக்கைகளான வடக்கு,கிழக்கு இணைப்பு, காவல்துறை மற்றும் காணி அதிகாரப்பகிர்வு என்பன நடைமுறைச் சாத்தியமற்றவை.
இந்தியாவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள், ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்துக்கு பயணம் செய்த போது மாயாவதி அவரைக் கைது செய்ய முனைந்தார்.
இவர்கள் என்னைக் கைது செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? (தமிழர்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதன் மூலம்).
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களாலேயே இயக்கப்படுகிறது. அவர்களுக்கு அமைதியோ அரசியல்தீர்வோ தேவையில்லை. நியாயமான அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்பது முக்கியமானது. ஆனால் அவர்கள் தமது பிரதிநிதிகளின் பெயர்களை பரிந்துரைக்கவில்லை.
இரா.சம்பந்தன் சிலருக்குப் பயப்படுகிறார் போலத் தோன்றுகிறது. இப்போது அவர்கள் அமெரிக்காவுக்குப் போய் முறையிடுகிறார்கள். இதற்கு எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. பிரபாகரன் காலத்தில் செயற்பட்டது போன்றே செயற்படுகின்றனர்.
சிறீ லங்காவில் அரசியல்தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்று எந்தவொரு நாடாவது கவலைப்படுமானால், தமது நாடுகளில் தங்கியுள்ள புலம்பெயர் தமிழர்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.
எம்மைக் குறை சொல்வது அர்த்தமற்றது. தமிழ்க் கட்சிகள் தான் அரசியல்தீர்வை தாமதப்படுத்துகின்றன என்றார் ராஜபக்சே.