அறிக்கையை விமர்சித்தால் கடும் நடவடிக்கை! எச்சரிக்கிறது சிறீலங்கா அரசு

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக விமர்சிக்கும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை குடியரசுத் தலைவரினால் பணிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு, அண்மையில் தமது விசாரணை குறித்த அறிக்கையை குடியரசு தலைவரிடம் ஒப்படைத்தது.

அதன்பின்னர் அவ்வறிக்கை தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள விமர்சனங்கள் அரசுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே குறிப்பிட்ட மனித உரிமை அமைப்புகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக அனைத்துலக சமூகத்திற்கு பொய்யான அறிக்கைகளைக் கொடுத்த மனித உரிமை அமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளின் அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அமைப்புகளின் நடத்தை கவலையளிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை தொடர்பான விமர்சனங்கள் வெளியாவதைத் தடுக்கும் நோக்கிலேயே இலங்கை அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

TAGS: