சிரியாவில் நிலவரத்தை அரபு லீக் பிரதிநிதிகள் ஆய்வு செய்து கொண்டிருக்கும் போதே, அவர்கள் முன்னிலையில், நேற்று முன்தினம் மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 35 பேர் பலியாகினர்.
சிரியாவில், மக்களுக்கு எதிரான இராணுவ வன்முறை குறித்து, அரபு லீக் பிரதிநிதிகள், 60-க்கும் மேற்பட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம், ஹமா, டெரா, ஹோம்ஸ் நகர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நகர்களில் தான், அரபு லீக் பிரதிநிதிகள் குழு ஆய்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், வடமேற்கு மாகாணமான இத்லிப்பில், இரண்டரை இலட்சம் பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டமாஸ்கசின் புறநகர்ப் பகுதியான டவுமாவில், அரபு லீக் பிரதிநிதிகள் ஆய்வு செய்து கொண்டிருந்த போது அவர்கள் முன்பாகவே, ஒன்றரை லட்சம் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதேநேரம், டமாஸ்கசின் மத்திய பகுதியில் உள்ள மசூதி முன்பாக, நேற்று இராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. அங்கு, ஆர்ப்பாட்டம் எதுவும் நடக்குமானால் துப்பாக்கிச் சூடு நடக்கும் என மறைமுக எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது.