தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்கிய ‘தானே’ என்ற புயலாலும் அப்புயலின் காரணமாகப் பெய்த கடும் மழையாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
புயல் ஏற்படுத்திய பெரும் சேதங்கள் காரணமாய் ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, அரசாங்கம் அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்புயலில் மிக அதிகமான உயிரிழப்புகளையும் சொத்து சேதங்களையும் சந்தித்துள்ள கடலூர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி, பிபிசியிடம் கருத்து வெளியிடுகையில், கடலூர் மாவட்டத்தில் மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரை தெரியவந்துள்ளதென அவர் தெரிவித்தார்.
பள்ளிக்கூடங்கள், சமுதாயக் கூடங்கள் போன்ற இடங்களில் அரசாங்கம் அமைத்துள்ள நிவாரண முகாம்களில் 7500 பேர் வரையிலான மக்கள் தங்கியிருப்பதாகவும் இவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நிவாரணப் பணிகளுக்கென முதற்கட்டமாக 150 கோடி இந்திய ரூபாய் உதவித் தொகையை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெள்ளியன்றே அறிவித்திருந்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா 2 இலட்சம் இந்திய ரூபாய் நஷ்ட ஈட்டுத் தொகையும் அறிவித்துள்ளது.