கொள்கையில் மாற்றமில்லை என்கிறது வடகொரியா

வடகொரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கொள்கையில் பெரிய மாறுதலை எதிர்பார்க்க வேண்டாம் என்று அனைத்துலக சமூகத்துக்கு அந்த நாடு தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் தலைவராக இருந்த கிம் ஜாங் இல் மரணமடைந்து அவரது இறுதி நிகழ்வுகள் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பிறகு நாட்டின் அதியுயர் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அவரது மகன் கிம் ஜாங் உன் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.

நாட்டின் மிகவும் அதிகார பலம் பொருந்திய ஒரு அமைப்பும், முடிவுகளை எடுக்கும் தலைமை அமைப்புமான, தேசிய இராணுவ ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையிலேயே, தமது நாட்டின் கொள்கைகளில் எந்த மாறுதலையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது நாட்டு அரசிடமிருந்து கொள்கை ரீதியாக எந்த மாறுதலையும் உலகிலுள்ள முட்டாள் அரசியல்வாதிகள் மற்றும் தென்கொரியாவிலுள்ள பொம்மை அரசாங்கங்கம் எதிர்பார்க்க வேண்டாம் என்று தாங்கள் உளமார கூறுகிறோம் என்று அந்த அறிக்கையில் சொல்லப்படுள்ளது.