தெற்கு சூடானில் உள்ள பிபோர் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இனங்களுக்கிடையிலான மோதல்கள் ஆரம்பமானதை அடுத்து அங்கிருந்து பல்லாயிரக் கணக்கானோர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
போட்டிப் பழங்குடியின குழுக்களின் போராளிகள் நெருங்கி வருவதையிட்டு கிராம மக்கள் தமது உயிரை காப்பாற்ற தப்பிச் செல்ல வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையே எச்சரித்துள்ளது.
கால்நடைகளைக் களவாடுவது குறித்த நீண்ட காலப் பிரச்சினையுடன் தொடர்புடைய வன்செயல்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையில், லூ நூர் இனத்தவரால், பல்லாயிரக்கணக்கான முர்லே பழங்குடியின மக்கள் இடம்பெயரச் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
லூ நூர் இனத்தவர்களால் கிராமங்கள் தாக்கப்பட்டு வீடுகள் எரிக்கப்படுவதால், முர்லே இனத்தவர் பாதுகாப்பான இடங்களுக்கு நடையாகச் சென்றடைவதற்கு ஒரு வாரம் பிடிக்கிறது என்று கிழக்கு ஆப்பிரிக்க பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

























