நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் ஜனநாயகத்தை கேள்விக்குறியாகிறது

தனக்கு ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக தனது பதவிவை துறப்பதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அறிவித்துள்ளமையானது, நாட்டின் நீதித்துறை எத்தகைய சவால்களை சந்தித்துள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் உள்ளதாவது, குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கின் தீர்ப்புகள் மற்றும் கள விஜயங்கள் மீதான அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் நீதிபதிக்கு விடுக்கப்பட்டு வந்துள்ளது இதனூடாக வெளிப்பட்டுள்ளது. சுயாதீனமாக செயற்பட வேண்டிய நீதிக்கட்டமைப்பை ஆட்டங்காணச் செய்த குறித்த அச்சுறுத்தல்வாதிகளை ஜனநாயக மாண்பற்றவர்களாகவே கருத வேண்டியுள்ளது.

குருந்தூர்மலை வழக்கு தொடர்பாக நீதிபதி சரவணராஜா கடந்த (04.07.2023) அன்று குருந்தூர்மலைக்கு விஜயம் செய்திருந்தபோது தெரிவித்த கருத்துகளை சுட்டிக்காட்டி (07.07.2023) அன்றைய நாடாளுமன்ற உரையிலும், தொடர்ந்து பொதுவிலும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடுமையான அவதூறுகளை வெளிப்படுத்தியிருந்தார்.

நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதித்துறையை கேலிக்குள்ளாக்கிய ஒருவரது நிலைப்பாட்டுக்கு அமைவாக நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களமும் செயற்பட்டுள்ளமை அதிர்ச்சியை தருகிறது.

குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு சட்டமா அதிபர் மட்டத்திலிருந்தும், அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளமையானது மோசமான அதிகார துஷ்பிரயோகமாக அமைகிறது.

இந்த பதவி துறத்தலானது, பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களும் செயற்பட வேண்டும் என்ற கடும்போக்குவாதத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

அந்த கடும்போக்குவாதத்துக்கு நீதித்துறையும் விலக்கல்ல என்ற துர்ப்பாக்கிய நிலையை கண்டு நான் பெரிதும் கவலையடைந்துள்ளேன். தனிநபர்களாலும், அரச கட்டமைப்புகளாலும் வஞ்சிக்கப்படும் மக்கள் சட்டத்தை நம்பி, அதை நடைமுறைப்படுத்தும் நீதித்துறையை நாடுகிறார்கள்.

 

-tw