கொழும்பில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இன்று காலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இந்த பேருந்தில் 17 பயணிகள் பயணித்த நிலையில், அவர்கள் விபதத்தில் காயமடைந்து சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், விபத்தில் இதுவரை ஐந்து ஆண்கள் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து சபையின் தலைவர் எஸ்.எம்.டி.எல்.கே.டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், உயிரிழந்தவர்களில் இருவரை தவிர்த்து ஏனையோர் பற்றிய விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்வை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை காண தேசிய வைத்தியசாலைக்கு சென்றிருந்த நிலையிலேயே, அவர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகளை முன்னெடுக்க தலா 5 லட்சம் ரூபாவை அவர்களின் குடும்பங்களுக்கு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் அதிபரின் செயலாளர் ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விபத்துக்குள்ளான தொடருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக கொள்ளுப்பிட்டிய காவல்துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அல்விஸ் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தோர் மீட்கப்பட்டு கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்தின் காரணமாக தற்போது குறித்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டு வீதியூடான போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

-tw