வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை : ஜனவரி முதல் மற்றுமொரு வரி அதிகரிப்பு

இலங்கை பொருளாதாரம் தற்சமயம் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. சில வேளைகளில் ஜனவரி மாதம் முதல் சொத்து வரி அறவிடப்படலாம் என்ற ஐயப்பாடு உண்டு என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2022ஆம் ஆண்டின் நான்கு காலாண்டிலும் இலங்கை பொருளாதாரம் ஒரு எதிர்க்கணிய பெறுமதியை காட்டுகின்றது. 2023ஆம் ஆண்டின் இரண்டு காலாண்டுகளும் மீண்டும் எதிர்க்கணிய பெறுமதியைத் தான் காட்டுகின்றது. இதன்படி, கடந்த ஆறு காலாண்டுகளாக எதிர்க்கணிய பெறுமதியைத் தான் காட்டுகின்றது.

இலங்கை பொருளாதாரம் இன்னும் மோசமான நிலையில் தான் இருக்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை உதவிக்காகச் சென்ற போது சர்வதேச நாணய நிதியம் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.

அதில் வரி வருமானம் இலங்கையில் மோசமானதாக இருக்கின்றது. அதனை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை சர்வதேச நாணயம் நிதியம் விதித்தது.

உதாரணமாக, நடத்தில் இயங்கும் நிறுவனங்களை சீரமைக்க வேண்டும், செலவைக் குறைக்க வேண்டும், வரியை அதிகரிக்க வேண்டும் மற்றும் மத்திய வங்கி தொடர்பான சில சீர்த்திருத்தங்கள் எல்லாம் சர்வதேச நாணய நிதியம் கூறியிருந்தது.

உடனே அரசாங்கம் செய்த வேலை வரியை அதிகரித்தது. 18 வீதமாக இருந்த வருமான வரியை இரண்டு மடங்காக 36 வீதமாக அதிகரித்தது. பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டது. நிறுவனங்களது வரி 28 வீதத்தில் இருந்து 30 வீதமாக அதிகரிக்கப்பட்டது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சினைக் கேட்டு இலங்கை அரசாங்கம் வரியை அதிகரித்திருந்ததால் இந்த தனி நபர்களும் நிறுவனங்களும் தான் வரிச்சுமையை எதிர்நோக்கியுள்ளார்கள்.

இலங்கையில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் எல்லாம் இணைந்து கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் பேர் தான் வரி செலுத்துகின்றார்கள். தற்போது சர்வதேச நாணய நிதியம் சொல்லுகின்றது. குறிப்பிட்டிருந்த வருமான இலக்கு எட்டப்படவில்லை. அதுதான் இரண்டாம் கட்ட நிதி கிடைக்காமைக்கு காரணம் என்று.

அத்துடன் வருமானம் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றது. இந்த நிலையில் மீண்டும் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற அழுத்தம் மற்றும் நிபந்தனை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சில வேளைகளில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்த சொத்து வரி விதிக்கப்படலாம் என்ற ஒரு ஐயப்பாடு மக்கள் மத்தியில் இருக்கின்றது. ஏனென்றால் ஐஎம்எப் கூறியதுபோல வரி வருமான இலக்கு எட்டப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

 

 

-tw