தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வளிக்கத் தவறிய ரணில் அரசாங்கம் : சுமந்திரன்

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை இந்த மாவீரர் வாரத்தில் நினைவு கூருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சிறிலங்கா நாடாளுமன்றமும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வளிக்க தவறியுள்ளதாக இன்றைய(22) நாடாளுமன்ற அமர்வின் போது, சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“அரசியலமைப்பு பேரவை தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பல விடயங்கள் பேசப்பட்டன, எனினும், அரசியலமைப்பு பேரவையில் இடைவெளி காணப்படுகிறது.

பேரவைக்கான 10 உறுப்பினர்களும் இதுவரை நியமிக்கப்படவில்லை. உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழிவதற்கு எமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனடிப்படையில், மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயரை நாம் முன்மொழிந்தோம். எனினும், இதுவரை அவர் உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்படவில்லை.

இது தொடர்பில் பலமுறை நாம் கருத்து வெளியிட்டுள்ளோம். எனினும், இது தொடர்பான பதில் இதுவரை எமக்கு கிடைக்கப் பெறவில்லை.

சிறிலங்காவின் அதிபராக பதவியேற்றதன் பின்னர், ரணில் விக்ரமசிங்க மூன்று தடவை சர்வகட்சி மாநாட்டை நடத்தியிருந்தார்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக குறித்த நடவடிக்கையை அவர் முன்னெடுத்தார். எனினும், தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க அவரும் இந்த நாடாளுமன்றமும் தவறியுள்ளது.

அரசியலமைப்பு பேரவைக்கு வெளியில் எங்களை வைத்திருக்கிறீர்கள். இந்த நிலையில், தமிழர்களின் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு வழங்க முடியும்? நாம் யாசகர்கள் அல்ல.

எமக்கு இதனை தாருங்கள் அதனை தாருங்கள் என எம்மால் உங்களிடம் கெஞ்ச முடியாது. நாம் பாரம்பரியமாக இலங்கையில் வாழும் மக்கள். வேறு தரப்பினரை விட அதிக காலம் நாம் இலங்கையில் வாழ்ந்து வருகிறோம். இதனை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.”

 

 

-ib