தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பை மறைக்க இலங்கை முயற்சி முயற்சிக்கின்றது

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததின் போது தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவழிப்பை சர்வதேச சமூகத்தினரிடமிருந்து மறைக்க இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றது என கனடாவின் பிராம்டன் நகர முதல்வர் பற்றிரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

கனடாவின் பிரம்டன் நகரசபை வளாகத்தில் நேற்று(21) இடம்பெற்ற தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்ட வரலாற்று நிகழ்வில் உரையாற்றிய பிராம்டன் நகர முதல்வர் பற்றிரிக் பிரவுன், ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பையும் மனித உரிமை மீறல்களையும் தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை ஒரு போதும் மறக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ கடந்த 2009 ஆம் ஆண்டில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இலங்கையில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் நான் அறிந்திருக்கவில்லை.

குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற இன அழிப்பை கண்டு நான் மனம் வருந்துகிறேன். தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவழிப்பை சர்வதேச சமூகத்தினரிடமிருந்து மறைக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது.

எனினும், பிரித்தானியாவின் சனல் – 4 ஊடகம் வெளியிட்ட காணொளியின் மூலம் நாம் பல விடயங்களை அறிந்து கொண்டோம்.

தமிழர்களின் வரலாறு என்றும் அழியாது. அது அழிக்கப்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

ஜெனிவாவில் தமிழ் மக்களுக்காக நான் குரல் கொடுத்துள்ளேன். இலங்கையில் நடத்தப்பட்ட இன அழிப்புக்கு இதுவரை பொறுப்புக் கூறப்படவில்லை என்பதையும் நான் அறிவேன்.

இன்று மட்டுமல்ல ஒவ்வொரு நாளும், கனடா வாழ் ஈழத்தமிழர்களின் எழுச்சியையும், பிரம்டன் மற்றும் கனடா முழுவதுமான எமது சமூகங்கள் அனைத்தையும் வளப்படுத்துவதில் அவர்கள் ஆற்றி வரும் பங்களிப்பையும் கொண்டாடுவோம்” – என்றார்.

தமிழீழ தேசியக்கொடி நாள் வருடாந்தம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நினைவுகூரப்படுகிறது.

இதற்கமைய, இந்த கொடி அறிமுகப்படுத்தப்பட்ட 33 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்றைய தினம் பிராம்டன் நகர மண்டபத்தில் தமிழீழத்தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

 

-ib