உக்ரைன் – ரஷ்ய போரில் உயிரிழந்த இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது

உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் நேற்று  நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் மற்றும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் அரசாங்கத்தின் போர் முனையில் வெளிநாட்டுப் படைகளை வழிநடத்தி, சர்வதேச உக்ரைன் ஆயுதப் படைகளின் முதல் சிறப்புப் படையின் தளபதியாக பணியாற்றிய போது ரஷ்ய தாக்குதல்களில் இலங்கையை சேர்ந்த கூலிப்படை உறுப்பினரான கெப்டன் ரென்டீஸ் எனப்படும் அன்ரூ ரனிஸ் ஹேவகே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலில் உக்ரைனுக்காக போரிட்ட மேலும் இரண்டு இலங்கை கூலிப்படை உறுப்பினர்களான எம்.பிரியந்த மற்றும் ரொட்னி ஜயசிங்க ஆகியோரும் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் உக்ரைன் இராணுவ வீரர்கள் சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரம் சென்று கேப்டன் ரனிஷ் ஹேவவின் உடலை மீட்டுள்ளதாகவும், ஏனைய இருவரின் உடல் இதுவரை மீட்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கெப்டன் டென்டீஸ் என்ற பெயரில் உக்ரைனுக்குள் பிரபலமடைந்திருந்த அன்ரூ ரனிஸ் ஹேவகே இலங்கை காலாற்படையின் அதிகாரியாக செயற்பட்டுள்ளதை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

உக்ரைன் இராணுவத்தில் அமெரிக்க, கனேடிய மற்றும் பிற வெளிநாட்டுப் படைகளுக்கு தலைமை தாங்கிய அதிகாரி ரனிஸ் ஹேவகேவின் இறுதி சடங்குகள் உக்ரைன் அரசாங்கத்தின் இராணுவ மரியாதையுடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே இராணுவ மோதல்கள் தொடங்கியதையடுத்து, வெளிநாட்டு வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் விடுத்த வெளிப்படையான அழைப்பை ஏற்று ரனிஷ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டு இராணுவத்தில் சேர்ந்துள்ளார்.

ரனீஸ் ஹேவகே உக்ரைனில் வெளிப்படுத்திய திறமைகள் காரணமாக உக்ரைன் ஜனாதிபதி அவருக்கு இராணுவ பதவி நிலை அதிகாரியாக பதவி உயர்வு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

-ll