எதிலி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டதால் தமிழ் இளைஞன் தற்கொலை!

தம்மைப் பாதுகாத்துக்கொள்ள புலம்பெயர்ந்து சென்றாலும் தஞ்சமடைந்த நாட்டினால் எதிலி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு தங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இலங்கைக்கே திருப்பி அனுப்பப்படும் பரிதாபங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இலங்கையில் இடம்பெற்ற போர் காரணமாக அந்நாட்டை விட்டு வெளியேறி நெதர்லாந்தில் தஞ்சமடைந்த இராஜரட்ணம் குஞ்சுப்பிள்ளை என்ற இளைஞன், தனது எதிலி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

எதிலி தஞ்சம் கோரி விண்ணப்பம் செய்த நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நெதர்லாந்தில் வாழ்ந்து வந்த இராஜரட்ணம் குஞ்சுப்பிள்ளையின் எதிலி அந்தஸ்து கோரிக்கையை நிராகரித்து, அவரை  இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்காக சிறைச்சாலையில் நெதர்லாந்து அரசாங்கம் தடுத்துவைத்திருந்தபோது கடந்த 26.12.2011 அன்று அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட இவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சொந்த இடமாகக் கொண்டதுடன் குறிப்பிட்ட காலமாக இந்தியாவில் அகதியாக வசித்து வந்தவர் என்பதோடு அவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா அரசினால் தமிழர்கள் கொல்லப்படுகின்றமை, சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றமை போன்ற  அனைத்து விடயங்களும் தமிழர்களால் மக்களால் பேரணிகள், அரசியல் சந்திப்புகள், மனுக்கள் மூலமாக நெதர்லாந்து அரசுக்கு  நீண்ட காலமாக தெரியப்படுத்தப்பட்டு வந்த போதிலும் அவற்றினைக் கருத்தில் கொள்ளாது தமிழர்களின் எதிலி தஞ்சக் கோரிக்கைகளை நிராகரித்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.