இலங்கையில் அவசரக்காலச் சட்டம் நீக்கப்பட்டது!

கடந்த 3 தசாப்த காலங்களாக இலங்கையில் அமலில் இருந்த அவசரகாலச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது இலங்கை குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சே இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார்.

எனவே, அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பான தீர்மானம் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் வழக்கப்படமாட்டாது என்று நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றிய ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் முழுமையாக ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவசரகாலச் சட்டம் அவசியமற்றது என அவர் குறிப்பிட்டார். இதற்கு முழு காரணமாக இருந்து மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்ட படையினர் அதன்போது, அர்ப்பணிப்பை மேற்கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

குடியரசுத் தலைவரின் இந்த அறிவிப்பை அடுத்து உரையாற்றிய இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க, குடியரசுத் தலைவரின் இந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாக தெரிவித்தார்.

1979-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் 1985-ம் ஆண்டு மீண்டும் அமல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.