அம்னோ மூத்த தலைவர்:குதப்புணர்ச்சி தீர்ப்பு மட்டும் போதாது

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட்டது நீதித்துறை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டு வருவதைக் காண்பிக்கிறது என்று பிஎன் தலைவர்கள் மார்தட்டிக்கொள்ளும் வேளையில் முன்னாள் அமைச்சரும் அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அப்துல் காடிர் ஷேக் பாட்சிர் மட்டும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.

“அது போதாது…..ஆனால், அது ஒரு நல்ல தொடக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அது நீதித்துறை தன்னைத் திருத்திக்கொள்ள கிடைத்திருக்கும் தங்கமான வாய்ப்பு”, என்றார். அப்துல் காடிர், நேற்று மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறினார்.

அன்வார் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் பிஎன் தலைவர்களும் பிஎன் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதற்கு அது தக்கச் சான்று என உரக்க முழக்கமிட்டனர்.

அந்தத் தீர்ப்பு அப்துல் காடிருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த “வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு”, நீதித்துறையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தோற்றுவாயாக அமைய வேண்டும் என்றவர் விருப்பம் தெரிவித்தார். புதிய தலைமை நீதிபதி அரிபின் ஸக்காரியாவின் தலைமையின்கீழ் நீதித்துறை தன்னை மீட்டெடுக்க வேண்டும்.

முன்பிருந்த தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி அம்னோவின் சட்ட ஆலோசகராக இருந்தவர். ஆனால், அரிபினுக்கு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு இருந்ததில்லை. அவர் “இறை-அச்சம் கொண்ட நீதிபதி”, என்றாரவர்.

தீர்ப்புக்கு முன்னதாக, செகாம்புட்டில் உள்ள அன்வாரின் வீட்டுக்குச் சென்ற அப்துல் காடிர், அன்வாரின் பரிவாரத்துடன் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்துக்கும் சென்றார்.

இது, அவர் அன்வாரை ஆதரிக்கிறார் என்பதைக் காண்பிக்கிறதா என்று வினவியதற்கு, அன்வார் நெருக்கமான நண்பர் என்றார். ஆனால், அன்வார் சிறைசெல்வது “70விழுக்காடு உறுதி” என்றே அவர் நம்பினார்.

“நான் அன்வாருக்கு ஒரு நல்ல நண்பன். அன்வாருக்கு நெருக்கமான நண்பன் ஆனதற்கு டாக்டர் மகாதிர் (முகம்மட்)தான் காரணம். நான் அமைச்சராக இருந்த காலத்திலும் அவரைச் சந்திப்பதுண்டு”, என்றார் அந்த முன்னாள் அமைச்சர்.

அன்வார் நல்ல பிரதமர் ஆவார்

அன்வாரை நன்கு அறிந்து வைத்துள்ள அந்த 73-வயது அம்னோ மூத்த தலைவர், அன்வாரின் சிறப்புகளை வியந்து பாராட்டினார்.

“சிறந்த தலைவராகும் தகுதி அவருக்கு உண்டு. கம்பத்துக்குப்  போனால் கம்பத்து மக்களிடம் இயல்பாகவே பேசுகிறார். நடிப்பதோ நாடகமாடுவதோ இல்லை. என் தொகுதியான கூலிமுக்கு 10கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொரொக் தோ’ குன் கம்பத்தைச் சேர்ந்தவர்தான் அவர். பக்கா கம்பத்து மனிதர்.

“பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தால், மிகச் சிறந்த பிரதமராக விளங்குவார். குடிமக்கள்மீது இயல்பாகவே பரிவு கொண்டவர்”, என்று பாராட்டினார்.

ஆனால், நஜிப் அப்துல் ரசாக்கைவிடவும் அன்வார் சிறந்த பிரதமராக விளங்குவாரா என்ற கேள்வியை முன்வைத்தபோது அதற்குப் பதிலளிப்பதைத் தவிர்த்தார்.

70கள் தொடங்கி அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த அப்துல் காடிர், இப்போது அங்காத்தான் அமானா மெர்டேகா (அமனா) என்னும் அரசுசாரா அமைப்பில் (என்ஜிஒ) தீவிர ஈடுபாடு காட்டிவருகிறார்.

1999-இல் மகாதிர், இவரைச் சுற்றுலா அமைச்சராக நியமித்தார். பின்னர் அப்துல்லா அஹமட் படாவி பிரதமர் ஆனதும் அப்துக் காடிரைத் தகவல் அமைச்சராக்கினார்.

இப்போது அவர் கூலிம்-பண்டார் அம்னோ தொகுதி பொருளாளராக உள்ளார்.

TAGS: