பதவி விலக முடியாது; எதிர்ப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன்: சிரியா தலைவர்

சிரிய குடியரசுத் தலைவர் பஷர் அல் அசாத், பதவி விலக முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்ப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவில் அசாத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், அங்கு அரபு லீக்கின் 165 பிரதிநிதிகள் அடங்கிய குழு நிலவரத்தை நேரில் பார்வையிட்டு வருகிறது. நாட்டின் வடபகுதியில் உள்ள லடாகியா நகரில், அக்குழு மீது நேற்று சிலர் தாக்குதல் நடத்தினர். அதில் குவைத் அதிகாரிகள் இருவர் காயம் அடைந்தனர். எனினும், அக்குழு மீது பலதரப்பிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், கடந்தாண்டு ஜூன் மாதத்திற்குப் பின் நேற்று முதன் முதலாக, டமாஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் சிரிய குடியரசுத் தலைவர் அசாத் பேசினார். அவரது இரண்டு மணி நேரப் பேச்சில் கூறியதாவது:

“பாதுகாப்பு தான் சிரியாவின் தற்போதைய முன்னுரிமை. அதை நிறுவுவதற்காக, பயங்கரவாதிகளை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்கும். நமக்கு எதிரான அந்நியச் சதிகளால் நாம் வீழ்ந்துவிடப் போவதில்லை. அரபு லீக், கடந்த 60 ஆண்டுகளாக அரபுநாடுகளின் நலன்களைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துவிட்டது. அரபு லீக்கில் இருந்து சிரியா வெளியேறும் பட்சத்தில் அந்த அமைப்பே குலைந்துவிடும். நாம் விரைவில் வெற்றியை அறிவிப்போம். மக்கள் விரும்பினால் நான் பதவி விலகத் தயார்” இவ்வாறு அசாத் தெரிவித்தார்.